தேனி மாவட்டத்தில் ஒரு மாதமாக தொடரும் போலீஸ்- இந்து அமைப்புகள் மோதல்
தேனி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் தொடர்ந்து ஒரு மாதத்தை கடந்து போலீசாருடன் மோதல் போக்கினை மேற்கொண்டு வருகின்றனர்;
கடந்த ஒரு மாதமாக இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க கட்சியினர் இணைந்து தேனி மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கம்பம் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் ராம்குமார் கடந்த மாதம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பா.ஜ., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகள் இணைந்து மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையில் பஞ்சாப்பில் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியை கண்டித்து அடுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் போலீஸ்- பா.ஜ.கமோதலாகவே உருவெடுத்தது. ஒரு வழியாக போலீஸ் அதிகாரிகள் சமரசம் செய்தனர். இந்நிலையில் தஞ்சாவூரில் தனியார் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் போலீஸ் மெத்தன போக்கையும், தமிழக அரசின் கண்டுகொள்ளாத தன்மையையும் கண்டித்து பா.ஜ.கஇந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று போடி, தேனியில் இந்த பிரச்னையில் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும். தமிழக அரசு பாரபட்சமான முறையில் நடந்து கொள்வதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் கம்பம் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தாக்குதல் விவகாரத்தில் கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யாவிற்கும் இந்த அமைப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டு, அங்கு நீண்ட நேரம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இப்படி பல பிரச்னைகள், போலீசாருடன் கடும் கருத்து மோதலை ஏற்படுத்தி வருகிறது. ஆக இந்த மாதம் முழுவதும் போலீஸ்- இந்து அமைப்புகள் மோதல் என்ற நிலையே மாவட்டம் முழுவதும் காணப்படுகிறது . இது ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை என்பதை காட்டுகிறது. இந்நிலையில், முதல்வர் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவைப் பேணும் வகையில் சில நாள்களுக்கு முன்பு சிறப்புக்குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது