ஏலம், மிளகு, காபியை தொடர்ந்து புளியம்பழம் விற்பனையும் மும்முரம்

தேனி மாவட்டத்தில் வன வளங்கள் மிகவும் அதிகளவில் கொள்ளையடிக்கப்படுகின்றன

Update: 2023-11-26 16:30 GMT

பைல் படம்

தேனி மாவட்டத்தில் மேகமலையில் விளையும் ஏலம், மிளகு, காபி பயிர்களை பறித்து விற்பனை செய்த வனத்துறை அதிகாரிகள், தற்போது புளியம்பழங்களை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். வனத்துறை அதிகாரிகளே இந்த பணிகளில் ஈடுபட்டு பொருள் விற்பனை செய்து, பழியை பொதுமக்கள் மீது போடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் மேகமலை ஒன்றரை லட்சத்திற்கும் அதிக பரப்பளவு கொண்ட வளமான மலைப்பகுதி. இங்கு ஏலம், காபி, மிளகு பயிர்கள் விளைந்து கிடந்தன. இந்த வனத்தில் விளையும் பொருட்களை முறையாக ஏலம் விட்டு அதன் வருவாயினை அரசுக்கு சேர்க்க வேண்டும்.

ஆனால், தேனி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஏலம், காபி, மிளகு இருப்பதை கணக்கில் காட்டாமல், வன வளங்களை சுரண்டும் கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களே சம்பளத்திற்கு ஆள் விட்டு இந்த பயிர்களை பறித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் வனத்துறையில் முக்கியமான பலம் மிக்க சில அதிகாரிகளுக்கும் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இந்த முறை கேட்டினை அவர்களும் கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில், விரைவில் புளியம்பழம் சீசன் தொடங்க உள்ளது. தினமும் பல லோடு புளியம்பழம் பணியாளர்கள் மூலம் அடித்து லாரிகளில் விற்பனைக்கு அனுப்புவார்கள். கடந்த காலங்களில் வண்ணாத்திபாறை, புளியங்குடி, மாடத்தி உள்பட பல வனப் பகுதிகளில் புளியம்பழம் அடித்து மார்க்கெட்டிற்கு அனுப்பினர். இதன் மூலம் கிடைக்கும் வருவாயி்ல் பெரும் பகுதி வனத்துறை அதிகாரிகளுக்கு செல்வதாக புகார் எழுந்துள்ளது.

வனத்துறை அதிகாரிகளே தவறு செய்து விட்டு, அவர்களே, தங்கள் கட்டுப்பாட்டை மீறி வன வளம் கொள்ளையடிக்கப் படுவதாகவும், தடுக்க போதிய பணியாளர்கள் இல்லை என்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி தப்பி விடுகின்றனர். அதிகாரிகளின் இந்த நுாதன கொள்ளையையும் வனத்தை ஒட்டி வாழும் மக்கள் மீது திணிப்பது தான் வேதனையான விஷயமாக உள்ளது.

இதனை தடுக்க மாவட்ட அளவிலான அதிகாரிகள் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது வனத்துறையில் மிகவும் கண்டிப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சற்று தீவிரமான நடவடிக்கை எடுத்து, வனத்துறையில் உள்ள ஊழல் அதிகாரிகளை, களையெடுத்தால், வனவளம் மேலும் பல மடங்கு அதிகரிக்கும். தவிர காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்புவதன் மூலம் வனவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி  உள்ளனர்.

Tags:    

Similar News