டெல்லிக்கு பறக்கும் தலைகள்.. தமிழ்நாடு பாஜகவில் என்ன நடக்குது?
பாராளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் சிலர் டெல்லிக்கு பறக்க தொடங்கி உள்ளனர்
தமிழ்நாடு பாஜகவில் கடந்த 10 ஆண்டுகளாக முக்கிய தலைவர்களாக இருந்த பலரும் தற்போது ஆக்டிவ் அரசியலில் இருந்து மாற்றப்பட்டு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு பாஜகவிலும் இளம் தலைவர்களுக்கு தற்போது முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பாக தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அண்ணாமலையின் நியமனத்திற்கு பின் கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.
பல இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகள், பல்வேறு அணி தலைவர் பதவிகள் வழங்கப் பட்டன. இன்னொரு பக்கம் பாஜகவில் சீனியர்களாக இருந்த பல்வேறு தலைவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக எல் . முருகனுக்கு முன்பாக தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தமிழிசை தூத்துக்குடியில் தோல்வி அடைந்த பின் 2019ல் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
இவர் ஆளுநர் ஆன பின் எல்.முருகன் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழ்நாடு பாஜகவில் மூத்த தலைவராக வலம் வந்த முன்னாள் தலைவர் இல.கணேசன் 22ம் தேதி ஆகஸ்ட், 2021 அன்று மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேற்கு வங்க ஆளுநராக இல.கணேசன் கூடுதல் பொறுப்பும் வகித்து வந்தார். அதன்பின் இவருக்கு வழங்கப்பட்ட மேற்கு வங்க ஆளுநர் கூடுதல் பொறுப்பு நீக்கப்பட்டது.
மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராக முன்பு இருந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரின் பெயர் மீண்டும் தமிழ்நாடு பாஜக தலைவருக்கான லிஸ்டில் அடிபட்டு வந்தது. தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் இவரின் பெயரும் மீண்டும் தலைவருக்கான லிஸ்டில் அடிபட்டது.
இதையடுத்தே ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பதவி என்பது அரசியலில் இருந்து வழங்கப்படும் ரிட்டயர்மெண்ட் போன்றது ஆகும்.
ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுக்கி தள்ளாமல் அவர்களுக்கு மரியாதையாக வழங்கப்படும் ரிட்டயர்மெண்ட் ஆகும். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் சிலர் டெல்லிக்கு பறக்க தொடங்கி உள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் பாஜக ஒன்றும் அவ்வளவு பிரபலமான கட்சி கிடையாது. பெரிதாக தலைவர்களும் இல்லை. தேசிய அளவில் பாஜக பிரபலமாக இருந்தாலும் தமிழ்நாட்டில் அத்தனை பிரபலம் கிடையாது. இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தயவில் பாஜக 4 இடங்களை வென்றது.
வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தேர்தலில் வென்றனர். இந்த நிலையில் தான் தற்போது வரவுள்ள லோக்சபா தேர்தலிலும் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய இரண்டு பேரும் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாமல் இவர்கள் களமிறங்க உள்ளனர். ஒருவேளை இவர்கள் எம்பி ஆகும் பட்சத்தில் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்வார்கள்.
அதன்பின் அந்த தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல் வரும். நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி எம்எல்ஏவாக உள்ள நிலையில் திருநெல்வேலி எம்பி தேர்தலில் இவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாம். அதேபோல் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில், அவர் கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காது என்று கருதும் சீனியர்கள் சிலர் டெல்லிக்கு பறக்க தொடங்கி உள்ளனராம். தேர்தலில் எங்களுக்கு சான்ஸ் தரப்படாது என்றால்.. நியமன பதவி வழங்க வேண்டும். ராஜ்யசபா எம்பி பதவி, ஆளுநர் பதவி அல்லது வேறு நியமன பதவிகள் வழங்க வேண்டும் என்று கேட்டு டெல்லிக்கு பாஜகவின் டாப் சீனியர்கள் சிலர் பறக்க தொடங்கி உள்ளனராம்.
தமிழ்நாடு பாஜகவில் பிரபலமான உறுப்பினர்கள் அதிகம் இல்லை. லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சார்பாக அண்ணாமலை, எல் முருகன், கரு நாகராஜன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. இது இல்லாத மற்ற சீனியர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு பதிலாக நியமன பதவிகளை பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.