பூ மழைத்துாவி வசந்தங்கள் வாழ்த்த தலைமுறைகள் கடந்த கவிஞர்...
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கவிஞர் மற்றும் பாடலாசிரியர்களில் ஒருவர் புலமைப்பித்தன்.
இவர் தமிழ் எம்ஜிஆர் தொடங்கி கடைசியாக விக்ரம் பிரபு வரை பல தலைமுறை நடிகர்களின் படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். புலமைப்பித்தனின் ஒரிஜினல் பெயர் ராமசாமி. 1935ஆம் வருடம் கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் பிறந்தார். 1948லிருந்து கவிதைகள் கைவரப்பெற்ற இவரது முதல் கவிதையான ‘எழு ஞாயிறு’ திருக்குறள் முனுசாமி நடத்திய ‘குறள்மலர்’ இதழில் வெளியானது.
இளமைக் காலத்தில் இரவில் பஞ்சாலையில் பணி, பகலில் பேரூர் தமிழ்க் கல்லூரியில் படிப்பு என்று உழைத்தார். 1961ல் புலவர் பட்டம் பெற்று, திருச்செந்தூருக்கு அருகே உள்ள ஆத்தூரில் தமிழ் ஆசிரியராகப் பணியைத் துவக்கினார். பேச்சு மற்றும் கவிதைப்போட்டிகளில் கலந்து, பரிசுகளையும் பாராட்டுகளையும் வென்றெடுத்தார்.
கோவை முனிசிபல் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய போது, ஒண்டிப்புதூரில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் இவர் வரவேற்புரை வாசித்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தன்னைப் பாராட்டிய இயக்குனர் கே.சங்கரிடம், ‘சினிமாவில் பாட்டெழுத வாய்ப்புக் கொடுங்கள்’ என்று கேட்டார் புலவர். இயக்குனர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்தார். சாந்தோம் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. 125 ரூபாய் சம்பளத்தில், 25 ரூபாய் வாடகையில் வீடுபிடித்துக் குடியேறினார்.
பெரும்பாலும் சென்னை வீதியெங்கும் நடைப்பயணம் தான்.அப்படி நடந்த புலவரின் பாட்டுச்சாலைப் பயணத்துக்கான நாள் வந்தது. இவரை அழைத்துச்சென்று, ‘குடியிருந்த கோயில்’ படத்துக்கான ஒரு பாட்டுச் சூழலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே.சங்கர். சில கவிஞர்கள் எழுதி, திருப்தி வராத நிலையில் புலவருக்குக் கிடைத்த வாய்ப்பு அது. அன்று மெட்ராசில் கொட்டித் தீர்த்த மழைக்காக ஒதுங்கிய பாண்டி பஜார் கடையொன்றில் நின்ற படியே முழுப் பாடலுக்கான வரிகளையும் முடிவு செய்து விட்டார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘நான் யார் நான் யார் நீ யார்…’ என்று உருவான பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது.
கே.வி.மகாதேவன் இசையில் ‘அடிமைப்பெண்’ படத்தில் இவர் எழுதிய ‘ஆயிரம் நிலவே வா…’ எஸ்.பி.பாலசுப்பிரமணியத் தின் முதல் தமிழ்ப்பாடலாக அமைந்து, வெற்றி பெற்றது. ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இவர் எழுதிய ‘பூ மழைத்தூவி வசந்தங்கள் வாழ்த்த…’ பாடலில் வரும் ‘என் அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது’ என்கிற வார்த்தைகள் நேரடியாக தங்கை கதாபாத்திரத்தையும், குறிப்பால் அறிஞர் அண்ணாவையும் குறிப்பிட்டு கட்சிக்காரர்களால் கவுரவிக்கப்பட்டது. இன்றும் கல்யாண ஊர்வலத்தில் பேண்டு வாத்தியக் கலைஞர்களின் தவிர்க்க முடியாத பாடலாக விளங்குகிறது.
‘இதயக்கனி’ படத்தில் எழுதிய ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற…’ பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்றுவந்த நேரத்தில் பிரார்த்தனை கீதமாகவும் ஊரெல்லாம் ஒலித்தது. ‘நல்ல நேரம்’ படத்தில் எழுதிய ‘நான் பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினைத் தந்தாகணும்…’ என்ற வரிகளை வியந்து பாராட்டிப் பரிசளித்திருக்கிறார் தயாரிப்பாளர் சின்னப்பா தேவர்.
ஒரு சில கவிஞர்கள் தயங்கிய நேரத்தில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞரின் ‘நீதிக்குத் தண்டனை’ படத்தில் இவர் எழுதிய ‘நீதிக்குத் தண்டனை இது என்ன சோதனை…’ பாடல் அப்போதைய எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தாக்கியது.
ரஜினியின் ‘தங்க மகன்’ படத்தில் எழுதிய ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…’ பாடலில் காமரசம் மணக்கும். கமலின் ‘உன்னால் முடியும் தம்பி’ படத்துக்கு எழுதிய ‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…’ பாடல், காலம் கடந்து நின்று சமகால அரசியலைச் சாடும்.
‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் பிறிது மொழிதல் என்கிற இலக்கிய அணி அடிப்படையில் புலவர் எழுதிய ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சக் கிளி…’ பாடல் சிட்டி முதல் பட்டி வரை சிலாகிக்கப்பட்டது.
‘மெளனம் சம்மதம்’ படத்தில் வரும் ‘கல்யாணத் தேன்நிலா காய்ச்சாத பால்நிலா…’ பாடலில் 28 ‘லா’க்களைப் பயன்படுத்தி ராஜகீதம் இசைத்தார் புலவர். ‘அதோ மேக ஊர்வலம்…’ பாடலில் வரும் ‘இரண்டு வாழைத் தண்டின்மேல் ராஜகோபுரம்’ என்கிற வரியைக்கேட்டு, ‘ராஜ கோபுரம் எது புலவரே?’ என்று பலரும் வினவியிருக்கிறார்கள். ‘உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தது தான்’ என்று சொன்னார் புலவர்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் ‘நிலா அது வானத்து மேலே…’ பாடலை இளையராஜா எழுதினார். மற்ற பாடல்களைப் புலமைப்பித்தன் எழுதினார். ஜமுனாராணியும் எம்.எஸ்.ராஜேஸ்வரியும் இணைந்து பாடிய ‘நான் சிரித்தால் தீபாவளி…’ பாடல், பழைய காலத்து இசையமைப்பு பாணியில் உருவாகி ரசிகர்களைப் பரவசப்படுத் தியது.
கமல் மற்றும் இளையராஜா குரல்களில் ஒலித்த ‘தென்பாண்டிச் சீமையிலே…’ சோகம் பிழியும் தாலாட்டுப்பாடலாக ரசித்துக் கொண்டாடப்பட்டது.
மனோவும் சித்ராவும் பாடிய ‘நீயொரு காதல் சங்கீதம்…’ மெல்லிசையால் ரசிகர் மனதை வருடியது. வழக்கமாக தனது காதல் பாடல்களில் பெண் அங்கம் குறித்து வார்த்தை விளையாட்டு நடத்தும் புலவர், இந்தப் பாடலில் அப்படி ஒரு வார்த்தைகூட சேர்க்கவில்லை. டி.எல்.மகாராஜன் -பி.சுசீலா பாடிய ‘அந்தி மழை மேகம்…’ பாடல், ஹோலி பண்டிகையின் குறியீடாக கொண்டாடப்படுகிறது.
‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ‘சொர்க்கத்தின் திறப்பு விழா…’, ‘நீதிக்குத் தலைவணங்கு’ படத்தில் ‘இந்தப்பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்…’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘சிரித்து வாழ வேண்டும்…’ ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் ‘அழகிய விழிகளில்…’, ‘இது நம்ம ஆளு‘ படத்தில் ‘அம்மாடி இதுதான் காதலா…’, ‘காமதேவன் ஆலயம்…’ ‘நீங்கள் கேட்டவை’யில் ‘ஓ வசந்த ராஜா…’ என புலவர் புலமைப்பித்தனின் வெற்றிப் பாடல்களின் வரிசை நீளமானது.
‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’ ஆகிய வரலாற்றுப் பின்னணிப் படங்களுக்கு இவர்தான் பாடல்களை எழுதினார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக் கும் புலவர், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக்கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக் கிறார். புலவர் மறைந்து விட்டாலும் அவர் பாட்டுகள் இந்த காற்று உள்ள வரை உலா வரும்".