ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி இடுபொருள் கொண்டு செல்லும் விவசாயிகள்

பெரியகுளம் அருகே, விவசாயிகள் கொட்டகுடி ஆற்றுக்குள் இறங்கி ஆபத்தான முறையில் இடுபொருட்களை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

Update: 2021-11-30 08:30 GMT

ஜெயமங்கலம்- மேல்மங்கலம் கிராமங்களுக்கு இடையே கொட்டகுடி ஆற்றுக்குள் இறங்கி,  விவசாயிகள் ஆபத்தான முறையில் இடுபொருட்களை கொண்டு செல்கின்றனர்.

தேனி மாவட்டத்தில், வராகநதி பெரியகுளம் அருகே ஜெயமங்கலம்- மேல்மங்கலம் கிராமத்திற்கு இடையே செல்கிறது. இந்த இரு கிராமங்களையும் இணைக்கும் வகையில் பாலம் வசதி இல்லை. மேல்மங்கலம் கிராம மக்களுக்கு ஜெயமங்கலத்திலும், ஜெயமங்கலம் கிராம மக்களுக்கு மேல்மங்கலத்திலும் விவசாய நிலங்கள் உள்ளன. இதனால் ஒரு கிராம மக்கள் மற்றொரு கிராமத்திற்குள் உள்ள தங்களது விவசாய நிலங்களுக்கு செல்ல,  கொட்டகுடி ஆற்றினை கடந்தாக வேண்டும்.

கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து இல்லாமல் இருக்கும் போது எந்த பிரச்னையும் இல்லை. ஆற்றுக்குள் இறங்கிச் சென்று விடுவார்கள். ஆனால் ஆற்றில் தண்ணீர் வரும் போதும், விவசாயத்திற்கு தேவையான உரங்கள், இடுபொருட்களை ஆற்றுக்குள் இறங்கி கொண்டு செல்கின்றனர். விளை பொருட்களையும் கூட ஆற்றினை கடந்தே கொண்டு வருகின்றனர்.

தற்போது, கொட்டகுடி ஆற்றில் பெரும் வெள்ளம் செல்கிறது. வெள்ளத்தில் ஆற்றுக்குள் இறங்கியே விவசாயிகள் செல்கின்றனர். இங்கு பாலம் கட்ட வேண்டும் என்ற இந்த மக்களின் 50 ஆண்டு கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரண்டு கிராம மக்களும் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News