நூற்றுக்கணக்கான பாம்புகளை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினர்
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மீட்கப்பட்ட 400 க்கும் மேற்பட்ட பாம்புகள் வனத்துறை மூலம் காட்டுக்குள் விடப்பட்டன
தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்டுத்துறையினர் கடந்த ஆண்டில் ஊருக்குள் புகுந்த சுமார் 400க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு வனத்திற்குள் விட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் முழுவதும் கம்பம் பள்ளத்தாக்கிற்குள் அமைந்துள்ளது. மாவட்டம் முழுவதுமே மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்துள்ளன. இதனால் மாவட்டத்தின் அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள், கிராமங்கள் பெரும்பாலனவை வனப்பகுதிற்குள் இருக்கின்றன.
இதன்காரணமாக, தேனி மாவட்டத்தில் நகர் பகுதிக்குள் பாம்புகள் புகுந்து வருவது சகஜமான நிகழ்வு. பரவலாக அனைத்து இடங்களிலும் பாம்புகளின் நடமாட்டம் காணப்படும். தேனி மாவட்ட மக்கள் பாம்பினை கண்டால் பயபக்தியுடன் வணங்கும் குணம் கொண்டவர்கள். அதனால், இந்தமாவட்டத்தில் பாம்புகளை அடித்துக் கொல்வது எப்போதாவது அபூர்வமாக நடக்கும். பாம்புகளை அடித்தால், அந்த குடும்பத்தின் வம்சம் விளங்காமல் போய் விடும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதைத்தவிர பலருக்கும் பாம்புகளை கொல்வது வனச்சட்டப்படி குற்றம் என்பதும் தெரியும்.
ஆகவே தேனி மாவட்டத்தை பொறுத்தவரை வீட்டிற்குள் புகுந்த பாம்பினை கூட அடிக்க மாட்டார்கள். தீயணைப்புத்துறைக்கு தகவல் சொல்லி பிடித்து மீண்டும் வனத்திற்குள் விட்டு விடுவார்கள். இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தீயணைப்பு நிலையங்களும் தீ விபத்துகள், இதர விபத்துகளில் மீட்பு பணிகள் மேற்கொண்டதை விட பாம்புகளை மீட்டதே அதிகம். கடந்த ஆண்டில் மட்டும் 400க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த ஒரு வாரமாக போடியில் தினமும் பாம்புகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. நேற்று போடிநாயக்கனூரில் உள்ள காதிகிராப்ட் கடைக்குள் ஒரு பாம்பினை பிடித்தனர். கம்பத்தில் வீட்டிற்குள் ஒரு பாம்பினை பிடித்தனர். எப்படியோ தேனி மாவட்டத்தில் பாம்புகளை அடிக்கும் வழக்கம் இல்லாமல், மக்கள் எங்களை அழைத்து பத்திரமாக பிடித்து வனத்திற்குள் விடச் சொல்லி அறிவுறுத்துவது மிகுந்த வரவேற்புக்கு உரிய விஷயம் என தீயணைப்பு படையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.