கண்மாய்களை நிரப்பாமலேயே விடைபெறுமா வடகிழக்கு பருவமழை?
தேனி மாவட்டத்தில் கண்மாய்களை நிரப்பாமலேயே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை விடைபெற்று விடுமோ என விவசாயிகள் கவலையில் உள்ளனர்..;
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு குறைவாகவே பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை நல்ல முறையில் பெய்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் மாவட்டத்தின் சராசரி மழையளவான 831 மி.மீ.,ஐ கடந்து இந்த ஆண்டு 840 மி.மீ., வரை மழை பதிவானது. தீபாவளி வரை நல்ல முறையில் பெய்த மழை அதன் பின்னர் ஓரிரு நாட்கள் துாறியது. பின்னர் அதுவும் நின்று போனது.
இப்போது வரை மழைக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இவ்வளவு மழை கிடைத்தும் நீர் வரத்துக் கால்வாய்கள், கண்மாய்கள் துார்வாரப்படாததால், மாவட்டத்தில் 70 சதவீதம் கண்மாய்கள் நிரம்பவில்லை. முல்லை பெரியாறு, வராகநதி, கொட்டகுடி நதிப்படுகைகளில் உள்ள கண்மாய்கள் மட்டுமே நிரம்பின. மற்ற கண்மாய்கள் நிரம்பவில்லை. குறிப்பாக பி.டி.ஆர்., கால்வாய் பகுதியில் இன்னுமும் கண்மாய்கள் முழு அளவில் நிரம்பவில்லை. ஆண்டிபட்டி, மயிலாடும்பாறை, தேனி, சின்னமனுார் ஒன்றியங்களில் பெரும்பாலான கண்மாய்கள் வறண்டே கிடக்கின்றன.
கண்மாய்கள் நிரம்பினால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் ஓரளவு உயரும். கண்மாய்கள் நிரம்பாததால் இந்த ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் தேனி மாவட்டத்தில் உயரவில்லை. தவிர தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் முல்லை பெரியாறு பாசன பரப்பில் தற்போது முதல் போக அறுவடையும், இரண்டாம் போக நெல் நடவு பணிகளும் நடந்து வருகின்றன. முல்லை பெரியாறு அணையில் தற்போது நீர் மட்டம் 135.20 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து மிக, மிக குறைந்து விநாடிக்கு 500 கனஅடியாக உள்ளது. வெளியேற்றம் விநாடிக்கு ஆயிரது 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டிசம்பர் 30ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடைபெறும் என்பது உறுதி.
இடைப்பட்ட இந்த 15 நாள் இடைவெளியில் மழை பெரிய அளவில் பெய்யும் வாய்ப்புகள் இல்லை. இந்த ஆண்டு இதுவரை 18ம் கால்வாய், பி.டி.ஆர்., கால்வாய், 58ம் கால்வாய், திருமங்கலம் கால்வாய் உட்பட எந்த கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்படவில்லை. தண்ணீர் திறக்க கோரி விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. தற்போது பெரியாறு அணையில் உள்ள நீர் தேனி மாவட்டத்திலும் மதுரை மாவட்டத்திலும் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெல் விளைச்சல் எடுக்கும் வரை போதுமானது. ஆனால் சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களும், கால்வாய் பாசன விவசாயிகளும் வஞ்சிக்கப்பட்டு விட்டனர். இதற்கு மோசமான நீர் மேலாண்மை தான் காரணம் என விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இனிமேல் ஜனவரி, பிப்ரவரியில் கோடை மழை பெய்தால் தான் உண்டு. இதற்கு முந்தைய ஆண்டுகளில் தேனி மாவட்டத்தில் பலமுறை கோடை மழை அதிகம் பெய்து, வைகை அணை நிரம்பிய வரலாறுகளும் உண்டு. தற்போதய புவிவெப்பமயமாகி உள்ள சூழலில் கோடை மழைக்கு சாத்தியமில்லை. மாறாக கோடை சுட்டெரிக்கும் என்றே வானிலை ஆய்வு மைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேவையான அளவு மழை கிடைத்தும், அரசின் முறையற்ற நீர் மேலாண்மையால் இந்த ஆண்டும் தேனி மாவட்ட விவசாயிகள் ஏமாற்றப்பட்டு உள்ளனர் என்ற கடும் புகார் எழுந்துள்ளது..