சிறுத்தையை நேரில் பார்த்த விவசாயிகள் அலறி அடித்து ஓட்டம்..!
பெரியகுளம் டி.பொம்மிநாயக்கன்பட்டி கண்மாயில் இரவில் குடிநீர் குடிக்க வந்த சிறுத்தையை நேரில் பார்த்த விவசாயிகள் அலறி அடித்து ஓடினர்.;
கோப்பு படம்
பெரியகுளம் அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமம் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சோத்துப்பாறை, கும்பக்கரை, முருகமலை பகுதிகளில் சிறுத்தை உலவுவதாகவும், அதனை பார்த்ததாகவும் பலமுறை விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் இது பற்றி கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நள்ளிரவில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயிகள் இரண்டு பேர் கண்மாய் அருகே சிறுத்தை நின்றிருந்ததை நேரில் பார்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். சிறுத்தையை தேடி கிராம மக்கள் வந்த போது அதனை காணவில்லை. தண்ணீர் குடிக்க வந்திருக்கலாம். தண்ணீர் குடித்ததும் திரும்ப வனத்திற்குள் சென்றிருக்கலாம். மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.