கேரள அரசின் டிஜிட்டல் சர்வேயினை தடுத்து நிறுத்த ஐகோர்ட் கிளையில் வழக்கு?
தமிழக எல்லை மாவட்டங்களில் கேரள அரசு நடத்தும் டிஜிட்டல் ரீ சர்வேயினை தடுக்க மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர உள்ளனர்
கேரள அரசின் தன்னிச்சையான டிஜிட்டல் ரீ சர்வே பணிகளை நிறுத்தக்கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழங்குத்தொடரப் போவதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இப்பிரச்னை தொடர்பாக இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம், இ.சலேத்து, பொன்.காட்சிக்கண்ணன், தேவாரம் மகேந்திரன், பா.ராதா கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறி உள்ளதாவது:
கடந்த நவம்பர் முதல் தேதியில் இருந்து கேரள அரசு டிஜிட்டல் ரீ சர்வே அப்பட்டமாக தமிழக எல்லைக்குள் நடத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் குரலெழுப்பி வருகிறது. வேறு வழியின்றி கடந்த நவம்பர் 7ம் தேதி தொடுபுழா சர்வே அலுவலகத்தில் இருந்து, தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு முறைப்படி தகவல் வந்ததாக சொன்னார்கள்.
குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் தமிழகம் கேரளாவோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் நிலையில், எங்கோ இடுக்கி மாவட்டத்தில் ஒரு தாலுகாவாக அறியப்படும் தொடுபுழாவிலிருந்து தகவல் வந்தது ஏன் என்கிற இமாலைய கேள்வியை முன்வைக்கிறோம்.
இடுக்கி மாவட்டத்தில் டிஜிட்டல் ரீ சர்வேக்காக 18 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்கிற தகவலையும் தமிழக அரசுக்கு முறைப்படி தெரிவித்தோம். அதில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் பாறத்தோடு, சாந்தம்பாறை, சதுரங்க பாறை ஆகிய மூன்றும் பட்டியலில் இருக்கிறது என்பதையும் அறிவித்தோம். தேவாரம் கிராமத்தை ஒட்டி இருக்கும் சாக்கலூத்து மெட்டு டிஜிட்டல் ரீ சர்வே அளவீட்டிற்குள் வருகிறது என்பது தெரிந்தும், தமிழக எல்லையில் உள்ள வனத்துறை குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்கிறது.
ஜமீன் ஒழிப்பிற்கு பிறகு, அவர்கள் கைவசம் இருந்த நிலங்கள் அத்தனையும் வனத்துறைக்கு ஒரு பகுதியும், வருவாய்த் துறைக்கு ஒரு பகுதியும் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டு துறைகளுமே, ஜமீன்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு, தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களை முறையாக பராமரிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறோம்.
வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய துறைகள்,முறையாக பதிவேடுகளை பராமரிக்காததால், ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களை கேரளா Double Entry மூலம் கையகப்படுத்தி வைத்திருக்கிறது. வனத்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, ஜமீன் பட்டா அடிப்படையில் என்பதை தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் மறந்துவிட வேண்டாம்.
இன்றைக்கும் ஒரு நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால், சுதந்திரத்திற்கு பிந்தைய யூடிஆர் எனப்படும் அ பதிவேட்டின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. ஜமீன் பட்டா அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை தமிழக வருவாய்த்துறை செயலாளருக்கு அறிவுறுத்த கடமைப்பட்டுள்ளோம். இதைத்தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறோம். ஜமீன் பட்டா அடிப்படையிலேயே தமிழக-கேரள எல்லை அளவீடு செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு.
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமச்சந்திரனை இரண்டு முறை சந்திக்கும் போதும், இதைத்தான் நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். திருத்தம் செய்யப்பட்ட அ பதிவேட்டின் அடிப்படையில் எல்லை அளவீடு நடக்குமானால், பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை தமிழகம் கேரளாவிடம் இழக்கும். இந்த கருத்து தவறு என்றால் தமிழக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் எங்களுடன் நேருக்கு நேர் விவாதிப்பதற்கு தயாராக வேண்டும்.
டிஜிட்டல் ரீ சர்வே என்கிற மோசடியை கேரளா தொடங்கி இன்றோடு 28 நாட்கள் நிறைவு பெறுகிறது. தமிழக கேரள எல்லையோரம் உள்ள நிலங்களை அளப்பதற்கான, இரண்டு மாநில அதிகாரிகளைக் கொண்ட கூட்டு கமிட்டி, இதுவரை போடப்படவில்லை.
தன்னிச்சைக்கு தன்னுடைய மாநிலத்தை கேரளா சர்வே செய்வதற்கு அது ஒன்றும் தனித்தீவு அல்ல. தமிழகம் மற்றும் கர்நாடகவோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஒரு மாநிலம். காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்கள் கர்நாடகாவோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் கேரள மாவட்டங்கள். மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் எல்லையை கேரளா டிஜிட்டல் ரீ சர்வே செய்யும் போது, கர்நாடக மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் எல்லையை அளக்க விடுவார்களா...? அதே நடைமுறையை ஏன் தமிழகத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் கேரளாவில் உள்ள ஏழு மாவட்டங்களிலும், டிஜிட்டல் ரீ சர்வே குழு கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் எங்களுடைய கேள்வி.
தமிழக வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் நில அளவைத்துறை அதிகாரிகள், கேரளா தன்னிச்சையாக நடத்தும் இந்த டிஜிட்டல் ரீ சர்வே தொடர்பாக இதுவரை கூட்டுக் கூட்டம் நடத்தி ஆலோசிக்க கூட இல்லை. கடந்த 1956பசல் அலி தலைமையிலான மொழிவழி பிரிவினை கமிட்டி கொடுத்த எல்லை வரைவீடு எங்கே...? தமிழகத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் கேரளாவில் உள்ள 15 தாலுகாக்களான, கட்டக்கடை, நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, புனலூர், கோணி, பீர்மேடு, உடுமஞ்சோலை, தேவிகுளம், சித்தூர், பாலக்காடு, மன்னார்க்காடு, நிலம்பூர், வைத்ரி மானந்தவாடி சுல்தான் பத்தேரி ஆகியவற்றில் கேரளா நடத்தவிருக்கும் ரீ சர்வே பணிகளை நிறுத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்தும் தெரிந்த நம்முடைய தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைத்து, கேரள மாநில தலைமைச் செயலாளரோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேற்கண்ட 15 தாலுகாக்களில் எல்லையை அளவீடு செய்வதற்கு முன் இரண்டு மாநில கூட்டு கமிட்டி உருவாக்கப்பட வேண்டும்.
இதில் எதையுமே செய்யாமல், கேரள மாநில அரசு சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தின் எல்லையோரத்தில் இருக்கும் இனவெறியர்கள் தான் இதை தூண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் கடுமையான புகார் எழுப்பி உள்ளார். இந்த பேச்சினை தமிழக அரசு ஏற்குமானால் தமிழகம் பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை இழந்து விடும். எனவே நீதிமன்றத்தை நாடி உரிய பரிகாரத்தை நாங்கள் பெறுவோம். ஜமீன் பட்டா அடிப்படையில் எல்லை அளவீடு இருக்குமானால் நாங்கள் அரசுக்கு உறுதுணையாக இருப்போம். திருத்தப்பட்ட யூ டி ஆர் அடிப்படையில் எல்லை அளவீடு இருக்குமானால், நீதிமன்றத்திற்கு செல்வோம். இதுவே எங்கள் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் நிலைப்பாடு ஆகும். இவ்வாறு கூறியுள்ளனர்.