ஏமாற்றுக் கும்பலிடம் சிக்காதீர்கள்.. பலன் தரும் மரங்களை நடுங்கள்

விவசாயிகள் ஏமாற்றுக்கும்பலிடம் சிக்கி தங்கள் நிலங்களில் குமிழ், தேக்கு, செம்மரங்களை நடவு செய்ய வேண்டாம்.

Update: 2023-12-17 08:45 GMT
பைல் படம்

மாறாக ஆண்டு தோறும் பலன் தரும் பழமரங்களை நடவு செய்யுங்கள். தோட்டக்கலைத்துறை அதற்கு தேவையான உதவிகளை செய்யும் என அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

இது குறித்து தேனி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது தொண்டு நிறுவனம், நிதி நிறுவனம் நடத்துவதாக கூறிக் கொண்டு சிலர், விவசாயிகளை சந்தித்து அவர்களது நிலங்களில் குமிழ், தேக்கு, சந்தனம், செம்மரங்கள் நடும் முயற்சிகளில் இறங்கி உள்ளனர். நடவு செய்து 20 ஆண்டுகளுக்கு பிறகு பலன் தரும் இந்த மரங்களை விவசாயிகள் யாரும் நடவு செய்ய வேண்டாம்.

ஆண்டுதோறும் பலன் தரும் மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை, வேம்பு, தென்னை, கொட்டை முந்திரி, இலவம் போன்ற பல்வேறு மரங்களை வளர்க்க தோட்டக்கலைத்துறை மானியமும், நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த மரங்களை நடவு செய்தால், இயற்கையையும் பராமரிக்க முடியும். ஆண்டுதோறும் விவசாயிகள் தங்களது குடும்ப பராமரிப்பு செலவுகளுக்கு தேவைப்படும் வருமானத்தையும் ஈட்ட முடியும்.

தவிர தற்போது தோட்டக்கலைத்துறை புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஊடுபயிர் சாகுபடி முறைகளை பரிந்துரை செய்து வருகிறது. இந்த பலன் தரும் மரங்களுக்கு இடையே கத்தரி, தக்காளி, முட்டைக்கோஸ், வெண்டை உள்ளிட்ட பல்வேறு வகை காய்கறிகளையும் சாகுபடி செய்து பலன் எடுக்க முடியும். இவ்வளவு வருவாய் தரும் மரங்களை நட வேண்டாம் என யாராவது கூறினால் விவசாயிகள் அவர்களை பற்றிய விவரங்களை அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர், துணை இயக்குனர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம். தோட்டக்கலைத்துறை அவர்களை பற்றி மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்து, நடவடிக்கை எடுக்க உதவி செய்யும். இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News