ரூ.60க்கு சின்னவெங்காயம்: விவசாயிகள் நேரடி விற்பனை

சின்ன வெங்காயத்தின் விலை சில்லரை மார்க்கெட்டில் கிலோ 100ஐ தொட்டு நிற்கும் நிலையில், விவசாயிகள் கிலோ 60 ரூபாய்க்கு நேரடியாக விற்பனை செய்தனர்.

Update: 2023-08-06 05:37 GMT

தேனி மாவட்டம், பாலார்பட்டி அருகே தங்களது தோட்டத்தில் அறுவடை செய்த சின்னவெங்காயத்தை மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் விவசாயிகள்.

இடைத்தரகர்கள் பிடியில் காய்கறி விவசாயிகள் சிக்கியிருக்கும் நிலையில். அறுவடையாகும் காய்கறிகளை அவர்களுக்குமே விற்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்றாலும் இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்து வருகின்றனர். இது தமிழகம் முழுவதும் பொதுவாக உள்ள நிலை. 

அரசாங்கமே நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும். உற்பத்தி பொருளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசாங்கத்திடமிருந்து வியாபாரிகள் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து விற்க வேண்டும் என்பதுதான் காலகாலமாக விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

தேனி அருகே உள்ள கிராமம் பாலார்பட்டி. இது தோட்டக்கலை கிராமம். மிகவும் அதிகளவில் தோட்டக்கலை பயிர்கள் விளைகிறது. தற்போது சின்னவெங்காயம் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வெங்காயத்தை விவசாயிகளே நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதுவும் கிலோ 60 ரூபாய் விலைக்கு விற்கின்றனர்.

விவசாயி மாயி தலைமையில் இவரது குடும்ப உறுப்பினர்கள் கபில்தேவ், தினேஷ் (இருவரும் பட்டதாரிகள்) அறுவடையான சின்னவெங்காயத்தை டிராக்டரில் குவித்து விற்கின்றனர். இது குறித்து மாயி, கூறியதாவது: சின்னவெங்காயம் வெளி மார்க்கெட்டில் என்ன தான் விலை விற்றாலும், கமிஷன் கடை வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு தான் விவசாயிகளிடம் வாங்குவார்கள். கமிஷன் கடை வியாபாரிகள் நிலம் இல்லாமல், உழைக்காமல், விவசாயிகளிடம் பொருட்களை வாங்கி கைமாற்றி விற்பனை செய்வதன் மூலம் பல லட்சம் சம்பாதிக்கின்றனர். உழைத்த விவசாயிக்கு ஒன்றுமே மிஞ்சுவதில்லை.

எனவே எங்களை பொறுத்தவரை விவசாய பொருட்களை நாங்களே நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்வோம். (இப்போது இதே பாணியியை பல விவசாயிகள் தொடங்கி விட்டனர்). இதன் மூலம் எங்களுக்கும் விளைபொருட்களுக்கு கணிசமான விலை கிடைக்கும். மக்களுக்கும் குறைந்த விலையில், பிரெஸ்ஸான காய்கறிகள் கிடைக்கும். கமிஷன் வியாபாரிகளிடம் சிக்கும் எந்த விவசாயாக இருந்தாலும் மீள்வது கடினம். எனவே விவசாயிகள் எங்களை போல் நேரடியாக தங்கள் பொருட்களை விற்க முன்வர வேண்டும். நாங்கள் பல ஆண்டுகளாக இந்த நடைமுறையினை பின்பற்றி வருகிறோம் என்று கூறினார்

Tags:    

Similar News