கேரள அரசியல்வாதிகள் நுழையக்கூடாது: விவசாயிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
முல்லைபெரியாறு அணைக்குள் கேரள அரசியல்வாதிகள் நுழையக்கூடாது என வலியறுத்தி கூடலுாரில் விவசாயிகள் நாளை ஆர்ப்பாட்டம்
முல்லை பெரியாறு அணைக்குள் இனி கேரள அரசியல்வாதிகள் நுழையக்கூடாது என வலியுறுத்தி நாளை கூடலுாரில் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இது குறித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர், ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது:
முல்லை பெரியாறு அணைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் கேரள அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அத்துமீறினால் அவர்கள் மீது தமிழக போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லை பெரியாறு அணை குறித்து தவறான பிரசாரங்களில் ஈடுபடும் தனிநபர்கள் மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் நேர்மையான வனத்துறை அதிகாரியான கேரள தலைமை வனக்காவலர் பென்னிகன்தோமஸ் (பேபி அணைக்கு செல்லும் வழியில் உள்ள 15 மரங்களை வெட்ட சட்ட விதிகளின்படி தமிழக அரசை அனுமதித்தவர்) மீண்டும் அரசு பணியில் அமர்த்தப்பட வேண்டும். அவரது நியாயமான செயல்பாட்டிற்காக அவரை பழிவாங்குவதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தனிநபர்கள் கண்டபடி வழக்கு தொடர்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். அவர்கள் தொடுத்த வழக்குகளை நிராகரிக்க வேண்டும். கேரளாவில் தமிழர்கள் அதிகம் வாழும், தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களை தன்னாட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை மாலை 4 மணிக்கு கூடலுார் பஸ்ஸ்டாண்ட் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஐந்து மாவட்ட விவசாயிகள் பெரும் திரளாக பங்கேற்று, கொரோனா விதிகளை பின்பற்றி மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளளனர்.