கம்பம் எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு பதாகை ஏந்தி விவசாயிகள் போராட்டம்

தேனி மாவட்டம், கம்பம் எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு விவசாயிகள் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Update: 2021-12-15 12:30 GMT

கம்பம் எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு பதாகை ஏந்தி போராட்டம் நடத்திய விவசாயிகள்.

தேனி மாவட்டம், கூடலுார் லோயர்கேம்ப் முல்லை பெரியாற்றில் இருந்து,  மதுரைக்கு குழாய் வழியே குடிநீர் கொண்டு செல்ல,  1300 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு,  அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. கூடலுார் முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம் இந்த திட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகின்றனர்.

குழாய் வழியே மதுரைக்கு குடிநீர் கொண்டு சென்றால், வழியோரம் உள்ள மாவட்டங்கள், நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு இப்பகுதி பாலைவனமாகி விடும். எனவே குழாய் வழியே குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட்டு, இந்த திட்ட செலவிலேயே கால்வாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லுங்கள். அல்லது தற்போது உள்ள நடைமுறை திட்டங்கள் மூலம் வைகை அணை வரை ஆறு வழியாக கொண்டு சென்று, அங்கிருந்து குடிநீரை சுத்திகரித்து எடுத்துச் செல்லுங்கள். இதன் மூலம் தேனி மாவட்டத்தின் நிலத்தடி நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த இரண்டு சங்கங்களின் சார்பில் நிர்வாகிகள்,  இந்த கோரிக்கையினை வலியுறுத்தி, இன்று கம்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பின்னர் அலுவலக வாசலில் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News