தமிழகத்தில் விளைநிலங்கள் எவ்வளவு உள்ளன முதல்வரிடம் தேனி மாவட்ட விவசாயிகள் கேள்வி
தமிழகத்தில் விளைநிலங்கள் எவ்வளவு உள்ளன என தேனி மாவட்ட விவசாயிகள் முதல்வரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்;
தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் தமிழக முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் நில அளவை தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நில அளவை செய்து புலஎண்கள் வாரியாக வரிசைப்படுத்துவது வழக்கம்.
இந்த முறை 30 ஆண்டுகளை கடந்தும் நில அளவை செய்யப்படவில்லை. ஏராளமான நிலங்கள் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை, மாநிலச்சாலை, ஒன்றிய சாலை, கிராமச் சாலைகளுக்கு எடுக்கப்பட்டுள்ளன. ஏராளமான விளை நிலங்கள் கட்டடங்களாக மாறி விட்டன. மாநிலம் முழுவதும் மேய்ச்சல் தரிசு நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. வனநிலங்களின் பெயரில் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நில உச்சவரம்பு, நகர்ப்புற உச்சவரம்புகளை விட அதிகளவு நிலங்களை தனியார் வைத்துள்ளனர். பூமிதான நிலங்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. ஆனால் இப்படி பறிக்கப்பட்ட நிலங்கள் முழுவதும் இன்னமும் விளை நிலங்களின் கணக்கில் உள்ளன. ஏராளமான குளம், கண்மாய், நீர் பிடிப்பு பகுதிகள் அழிக்கப்பட்டு அரசு அலுவலக பயன் பாடுகளுக்கும், தனியார் குடியிருப்புகளுக்கும் விற்கப்பட்டு விட்டது. இந்த நிலங்களும் நீர் பிடிப்பு பகுதி கணக்கில் தான் உள்ளன. நிலங்களை புல எண் வாரியாக அளவீடு செய்தால் மட்டுமே நீர் நிலைகளை முழுமையாக மீட்்டு அத்துமால் செய்ய முடியும். வன நிலங்களுக்கும் விளை நிலங்களுக்கும் எல்லை வரையரை செய்யப்பட வேண்டும். விவசாயிகளிடம் இருந்து அரசு எடுத்த நிலங்களின் விவரம் தெரியவரும். உண்மையில் தற்போது உள்ள பாசன நிலங்களின் உண்மை நிலவரம் தெரியவரும்.
விளைநிலங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படாததால், தமிழகத்தில் பொய்யான பல விவரங்கள் வெளியாகின்றன. கணக்கெடுப்பு நடத்தினால் பல பிரச்னைகளுக்கு எளிய தீர்வு கிடைக்கும். தவிர பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு உண்மையான கணக்கீடு நடத்தி முழு விவரங்களையும் வெளியிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.