தமிழக -கேரள மக்களிடையே மோதலை துாண்டாதீர்கள்: விவசாயிகள் வேண்டுகோள்
தமிழக கேரள மக்களிடையே மோதலை துாண்டிவிடும் போக்கினை கேரள அரசியல்வாதிகள் கை விட வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள்
ஒரு குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் போல் ஒற்றுமையுடனும், மிகுந்த புரிந்துணர்வுடனும் பழகி வரும் தமிழக, கேரள மக்களிடையே பிளவு ஏற்படுத்தி மோதலை துாண்டும் போக்கினை கேரள அரசியல்பிரமுகர்கள் கை விட வேண்டும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: இடுக்கி மாவட்டம், பீர்மேடு தாலுகாவில் உள்ள உப்புத்துறை பஞ்சாயத்து நிர்வாகம் முல்லை பெரியாறு அணையினை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
உப்புத்துறை பஞ்சாயத்தில் இருந்து 201 மீட்டர் ஆழத்தில் பெரியாறு ஓடுகிறது. அதுவும் எப்போதாவது உபரி நீர் மட்டும் அதில் வெளியேறிச் செல்லும். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளையும், 10 லட்சம் ஏக்கர் விளைநிலங்களையும், இந்த நீரை குடித்து உயிர்வாழும் ஒரு கோடி மக்களின் தாகத்தை பற்றியும் கவலைப்படாமல் ஏதோ ஒரு வன்மத்துடன் இப்படி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, நாம் வாழும் ஜனநாயக நாட்டில் ஏற்புடைய செயலே இல்லை. இந்த தீர்மானத்திற்கு வன்மத்தை தவிர வேறு காரணம் தெரியவில்லை.
சப்பாத்து பஞ்சாயத்தில் ஏழு ஆண்டுகளாக சிலர் இதே வன்மத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர். கேரள அரசியல்பிரமுகர்கள் இதனை வந்து பார்த்து ஊக்கப்படுத்தி வந்தனர். வந்தவர்கள் எல்லோரும் முல்லை பெரியாறு அணையினை இடிக்க வேண்டும் என்றே கூறினர். வரும் 22ம் தேதி முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் பிரமேச்சந்திரன், (கொல்லம் எம்.பி.,) உப்புத்துறைக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்.
கொல்லம் எம்.பி.,க்கும் உப்புத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர் வரும் நோக்கம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மக்களை தமிழகத்திற்கு எதிராக துாண்டி விட வேண்டும் என்பது மட்டுமே. நான் இடுக்கி மாவட்டத்திற்கு போய் இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. சில காரணங்களால் நான் அங்கு செல்வதை தவிர்த்து வருகிறேன். கடந்த அக்டோபர் 2ம் தேதி வெளியான ஒரு கேரள பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளனர். நான் வாகமண் பகுதிக்கு ரகசிய பயணம் செய்தேனாம். அங்குள்ள எஸ்டேட்களில் பணிபுரியும் தமிழர்களுக்கும் பண உதவி, பொருள் உதவி செய்து கேரள அரசுக்கு எதிராக துாண்டி விட்டேனாம். இப்படி அவதுாறு எழுதுகின்றனர்.
அமைதியாக அறவழியில் போராடும் எங்களை பற்றி இவ்வளவு அவதுாறுகளை பரப்புகிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் மதிக்காமல், கேரள அரசியல்வாதிகள் நடத்தும் நாடகம் முழுவதும் நியாயமான அறவழி செயலாம். அணையை இடித்து தமிழகத்தையும், அப்பாவி விவசாயிகளையும் பழி தீர்ப்பது அறவழிச்செயலாம். இப்படி முரண்பாடுகளை பேசி சிலர் கேரள அப்பாவி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
ஒற்றுமையுடனும், ஒரு குடும்பத்தில் பிறந்தவர்கள் போல் சகோதர உணர்வுடனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் தமிழக, கேரள மக்களை கேரளாவில் உள்ள நான்கு பேர் பிழைப்பதற்காக திட்டமிட்டு துாண்டி விட்டு பிரிவினையை ஏற்படுத்தி மோதலை துாண்டி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் விவசாயிகளிடையே தகராறு நடந்து வருகிறது. அந்த அளவு அங்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் தண்ணீரை வீணாக கடலுக்கு திறந்து விட்டு அதனை வேடிக்கை பார்த்து கைகொட்டி சிரிக்கின்றனர்.
கேரளாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மிகச்சிலர் மட்டுமே முல்லை பெரியாறு அணைக்கு எதிராக செயல்பட்டு மக்களை துாண்டி விடுகின்றனர். இவர்களை தமிழக அரசும், மத்திய அரசும் முழுமையாக கண்காணிக்க வேண்டும். இவர்களால் எந்த நேரமும் பெரிய பிரச்னையும், ஆபத்தும் உருவாகலாம். எனவே தமிழக- கேரள மக்களிடையே மோதலை துாண்டி விடும் போக்கினை கேரளாவினை சேர்ந்த அந்த குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.