பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கும் விவகாரம்: பொதுப்பணித்துறை மெத்தனமா

பெரியாறு அணையில் இந்த ஆண்டு 142 அடி தண்ணீர் தேக்க வாய்ப்பு இருந்தும் பொதுப்பணித்துறை கோட்டைவிட்டதாக விவசாயிகள் புகார்;

Update: 2023-11-25 09:30 GMT

பெரியாறு அணை நீர் மட்டம் தற்போது நுாற்றி முப்பத்தி ஆறு அடியை கடந்து கடல் போல் காட்சியளிக்கிறது.

பெரியாறு அணையில் இந்த ஆண்டு 142 அடி தண்ணீர் தேக்க வாய்ப்பு இருந்தும் பொதுப்பணித்துறை கோட்டைவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: இடுக்கி மாவட்டத்தில் பெய்யும் மழைநீர் மட்டுமின்றி, தென்காசி மாவட்டத்திலும் பெய்யும் மழைநீரும் பெரியாறு அணைக்கு வருகிறது. இந்த ஆண்டு தென்காசி மாவட்டத்திலும் கனமழை பெய்துள்ளது. இடுக்கி மாவட்டத்திலும் கனமழை பெய்தது.

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டிருந்த போது, அதாவது விநாடிக்கு தண்ணீர் வரத்து ஐந்தாயிரம் கனஅடியை நோக்கி எட்டிக் கொண்டிருந்த போது, தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள், பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு தண்ணீரை திறந்து விட்டனர். அந்த சூழலில் தண்ணீர் தேனி மாவட்டத்திற்கோ, மதுரை மாவட்டத்திற்கோ, வைகை அணைக்கோ தேவையில்லை.

இப்படி தேவையில்லாத சூழ்நிலையில் தண்ணீரை திறந்ததன் விளைவு, பெரியாறு அணையி்ல் நீர் மட்டம் 142 அடியை எட்டுவதில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தவிர அதிக வேகமாக நீர் வரத்து உயர்ந்து கொண்டிருந்த போது, கனமழையும் பெய்து கொண்டிருந்தது. இந்த வானியல் சூழலை நாங்களும் கவனித்துக் கொண்டிருந்தோம், அந்த நிலையில் தமிழகப்பொதுப்பணித்துறை நீர் வரத்தினை குறைத்து காண்பித்தது. நீர் மட்டம் உயரவில்லை என்றும் கணக்கீடுகளை வெளியிட்டது. இதிலும் எங்களுக்கு பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த குழப்பத்தில் இருந்து மீள்வதற்குள் அடுத்த குழப்பத்தை பொதுப் பணித்துறை தெளிவாக செய்து விட்டது. அதாவது தண்ணீர் தேவைப்படும் நேரத்தில், அதிக நீர் இருப்பு இருந்த நேரத்தில் 18ம் கால்வாயிலும் தண்ணீர் திறக்கவில்லை. பி.டி.ஆர்., கால்வாயிலும் தண்ணீர் திறக்கவில்லை. 58ம் கால்வாயிலும் தண்ணீர் திறக்கவில்லை. திருமங்கலம் கால்வாயிலும் தண்ணீர் திறக்கவில்லை. வைகை அணையி்ல் இருந்து திடுதிப்பென விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றி விட்டனர். அதாவது நீரை திறக்க வேண்டிய நேரத்தில், திறக்க வேண்டிய பகுதிக்கு திறக்கவில்லை. தேவையில்லாத நேரத்தில் தேவைக்கு அதிகமாக திறந்து வீணடித்து விட்டனர்.

இந்த ஆண்டு மட்டும் பொதுப் பணித்துறை மிகவும் சரியாக நீர் மேலாண்மையினை கையாண்டிருந்தால், நிச்சயம் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்கியிருக்கலாம். இந்த விஷயத்தில் பொதுப்பணித்துறை வேண்டுமென்றே கோட்டை விட்டு விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுப் பணித் துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கினை கண்டித்து போராட்டங்கள் நடத்தலாமா என நாங்கள் எங்கள் சங்க தலைமை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருகிறோம். எப்படியிருந்தாலும் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி குழப்பம் விளைவித்த அதிகாரிகளிடம் உரிய விளக்கம் கேட்டு, அவர்கள் தவறு செய்திருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News