கூடலுாரில் நெல் கொள்முதலில் ரூ. பல லட்சம் மோசடி

கூடலுாரில் நெல் கொள்முதல் நிலையத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக விவசாயிகள் புகார் கூறி உள்ளனர்.

Update: 2023-05-05 00:14 GMT
கூடலுார் நெல் கொள்முதல் நிலையத்தில் புகார் மனுவுடன் விவசாயிகள்.

தேனி மாவட்டம், கூடலுாரில் மட்டும் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு சராசரியாக 55 மூடைகள் நெல் விளைகிறது. ஒவ்வொரு மூடையும் 60 கிலோ எடை கொண்டவை.

விவசாயிகளிடம் இருந்து அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு கிலோ நெல் 21 ரூபாய் 60 காசுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக கூடலுாரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 40 கிலோ நெல் மூடைகள் மட்டும் வாங்கப்படுகின்றன. இது பற்றி பிரச்னையில்லை. ஆனால் 45 கிலோ எடை கொண்ட நெல் மூடைகளை 40 கிலோ என எடை போடுகின்றனர். அதாவது ஒவ்வொரு 40 கிலோ நெல் மூடைக்கும் 5 கிலோ கொள்ளையடிக்கின்றனர். தவிர ஒவ்வொரு மூடைக்கும் தனியாக 60 ரூபாய் செலவுக்கு வாங்கிக் கொள்கின்றனர் என விவசாயிகள் புகார் எழுப்பி உள்ளனர்.

ஒருவர், இருவர் அல்ல... பல நுாறு விவசாயிகள் இப்படி கூடலுார் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதன் பின்னர் நெல் கொள்முதல் நிலைய உயர் அதிகாரிகள், காவல்துறையினர் முன்னிலையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் எடை போடப்பட்டன.

கூடலுார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள விவசாயிகள்.

இது பற்றி முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன் கூறியதாவது: நானும், பாரதீய கிஷான் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு மற்றும் பல விவசாயிகள் கூடலுார் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தோம். இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்து கொள்முதல் செய்யப்பட்ட மூடைகள் எடை போடப்பட்டன. அத்தனை மூடைகளிலும் 40 கிலோ நெல்லுக்கு பதிலாக 45 கிலோ நெல் இருந்தது. இதனை உயர் அதிகாரிகளும் குறித்துக் கொண்டனர். காவல்துறையினரும் அப்போது உடன் இருந்தனர்.

எங்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூடுதல் நெல்லுக்குரிய பணத்தை திரும்ப தருவதாக கூறினர். ஆனால் நாங்கள் ஏற்க மறுத்து விட்டோம். அதிகாரப்பூர்வமாக எங்களது நெல் மூடைகளை எடை போட்டு, சிட்டை போட்டு முறைப்படி பணம் வழங்க வேண்டும் என கேட்டோம். ஒரு வயது முதிர்ந்த விவசாயிடம் மட்டும் நெல் எடை போட்ட விவகாரத்தில், அவரை மிரட்டி 30 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி உள்ளனர். தவிர சாப்பாட்டுக்கு என 4 ஆயிரம் ரூபாய் வாங்கி உள்ளனர்.

இதேபோல் எல்லா விவசாயிகளிடமும் வசூலிக்கின்றனர். தவிர கொள்முதல் நிலையம் மிகச்சிறிய இடத்தில் உள்ளது. எடை போட இடம் இல்லை. நெல் இருப்பு வைக்க இடம் இல்லை என பல விவசாயிகளை திருப்பி விடுகின்றனர். இவர்களிடம் விவசாயிகள் ஒவ்வொரு மூடைக்கும் அரசு நிர்ணய விலையில் இருந்து 300 ரூபாய் குறைத்து நெல் வாங்குகின்றனர். அந்த நெல்லை அதாவது விவசாயிகளிடம் வாங்கிய நெல்லை வியாபாரிகள் கொள்முதல் நிலையத்தில் விற்கின்றனர். இதற்கு ஒரு மூடைக்கு 60 ரூபாய் அதிகாரிகளுக்கு தனிக்கமிஷன் கொடுத்து விடுகின்றனர். இப்படி பல முனைகளிலும் மோசடி நடக்கிறது.

கூடலுார் நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. மாவட்டத்தில் 12 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அதிகாரிகள் விவசாயிகளிடம் எத்தனை கோடி ரூபாய் கொள்முதல் செய்துள்ளனர் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். இது பற்றி நாங்கள் யாரிடம் முறையிட்டாலும் எந்த பலனும் இல்லை. உயர் அதிகாரிகள் நெல் மூடைகளை எடை போட்டு பார்த்து, அதன் எடை அதிகமாக இருந்ததை உறுதி செய்த பின்னரும் எங்களுக்கு பதில் சொல்லாமல் சென்று விட்டனர். எனவே நாங்கள் இந்த முறைகேடுகளை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News