முல்லை பெரியாறு அணை 142 அடியை எட்டுகிறது: ஐந்து மாவட்ட விவசாயிகள் கொண்டாட்டம்
முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை நோக்கி உயர்ந்து வருவதை விவசாயிகள் கொண்டாட தொடங்கி உள்ளனர்.;
பல்வேறு இடையூறுகளை தாண்டி முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் விரைவில் (நாளைக்குள்) 142 அடியை எட்டும் என தெரிகிறது. இதனை கொண்டாடி வரும் ஐந்து மாவட்ட விவசாயிகள், கேரளா வழியாக தமிழக அரசு தான் நீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்கலாம் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட நிலையிலும், ரூல்கர்வ் முறையினை காரணம் காட்டி கடந்த மாதம் 29ம் தேதி கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், வருவாய்த்துறை அமைச்சர் ராஜன், பீர்மேடு எம்.எல்.ஏ.,,வாலுார் சோமன் மற்றும் கேரள அதிகாரிகள் கேரளா வழியாக நீர் திறந்தனர். அதன் பின்னர் முல்லை பெரியாறு அணைக்கு தினமும் வந்து ஆய்வு செய்ய தொடங்கினர்.
இந்நிலையில் தமிழக விவசாயிகள் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்த நிலையில், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி, பெரியசாமி மற்றும் தேனி மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் அணையில் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் கேரளா வழியாக தண்ணீர் திறப்பது படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த வாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் அணைக்கு வருவதும் தடுக்கப்பட்டு விட்டது.
இவ்வளவு சிக்கல்களுக்கும் மத்தியில் முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் இன்று மதியம் நிலவரப்படி 140.55 அடியை தாண்டியது. முல்லை பெரியாறு அணை நீர் பிடிப்பு பரப்பு, மற்றும் நீர் தேக்கப்பரப்பு பகுதியில் கடும் மழை பொழிவு இருப்பதால் ரூல்கர்வ் முறைப்படி அணையில் 142 அடி நீர் தேக்க வேண்டிய நிர்பந்தம் தமிழக அரசுக்கு உள்ளது. இதனை கேரளா நினைத்தாலும் தடுக்க முடியாது.
இதனை தமிழக அரசு செய்து வருகிறது. தற்போதய மழைப்பொழிவு கடுமையாக இருந்தால், நாளை அணை நீர் மட்டம் 142 அடியை எட்டி விடும் என தெரிகிறது. அப்படி 142 அடியை எட்டினால், அடுத்து அணைக்கு வரும் நீரை முழுவதும் கேரளா வழியாக திறக்க வேண்டிய நிர்பந்தம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இப்போது முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு நாளை கேரளா வழியாக தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த முறையாவது தமிழக அரசு தான் தண்ணீரை திறந்து விட வேண்டும். தண்ணீரை திறப்பதும், தேக்குவதும் நமது உரிமை என்பதை நிரூபிக்க வேண்டும். கேரள அரசியல்வாதிகளையோ, அதிகாரிகளையோ நமது பராமரிப்பில் உள்ள அணைக்குள் அனுமதிக்க கூடாது என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேசமயம், தமிழக செய்தி தொடர்பு அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்கள் என பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினரும், முல்லை பெரியாறு அணை விஷயத்தில் ஒரே நேர் கோட்டில், ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் அளவில் பக்கபலமாக நின்றனர். இதனை நினைத்து பெருமைப்படுவதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு ஊடகங்களின் செய்தி தொடர்பாளர்கள் அத்தனை பேருக்கும் மிகுந்த அளவு மரியாதை செய்து, முல்லைபெரியாறு அணையில் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதை கொண்டாட இருப்பதாகவும், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.