தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மீது விவசாய சங்க தலைவர் புகார்

தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இடுக்கி மாவட்ட தமிழர்களுக்கு சிகிச்சை மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2023-07-28 10:03 GMT

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை (பைல் படம்).

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கேரள தமிழர்களுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பாக மூணாறைச் சேர்ந்த சரோஜா, எலும்பு முறிவு சிகிச்சை பெறுவதற்காக க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உடன் அவரது கணவர் நாராயணசாமி இருந்திருக்கிறார்.

இந்த நாராயணசாமி தேவிகுளத்தின் முதல் தமிழ் சட்டமன்ற உறுப்பினரான கணபதியின் உடன் பிறந்த சகோதரர். இந்த நாராயணசாமியின் உடன் பிறந்த இன்னொரு சகோதரரான கிட்டப்ப நாராயணசாமியும், தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தான். இப்படி பெரிய பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்த சரோஜா தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று நாட்களிலும் எவ்வித சிகிச்சையும் கொடுக்கப்படவில்லை. அங்குள்ள மருத்துவர்களால் உதாசீனமும் செய்யப்பட்டு இருக்கிறார்.

இடுக்கி மாவட்டத்தில் வாழும் அப்பாவி தமிழ் தோட்ட தொழிலாளிகளை அந்த மாநில அரசுதான் மூன்றாம் தர குடி மக்களாக நடத்துகிறது என்றால், அவர்களது சொந்த மாநிலத்திலும் இதே நிலை தான் உள்ளது என்பதை நினைத்து பார்க்கையில் வேதனையாக இருக்கிறது.

நாங்களும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தேவிகுளத்தை மையப்படுத்தி ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்று கேரள அரசை நோக்கி கையை உயர்த்தி போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மூணாறு நகரில் உள்ள டாடா பன்னோக்கு மருத்துவமனையை காரணம் காட்டி,கேரள மாநில அரசு அதை நிறுத்தி வைத்திருக்கிறது.

தேவிகுளம் தாலுகாவில் கல்தடுக்கி ஒருவன் கீழே விழுந்தால் கூட, அவனுக்கு சிகிச்சை அளிக்கக்கூட அந்த டாடா மருத்துவமனையில் எந்த உபகரணங்களும் இல்லை என்பது வேதனையின் உச்சம். மருத்துவ சிகிச்சை வேண்டிய எவர் வந்தாலும், அவர்களை ஒன்று கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது அல்லது க.விலக்கில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது என்கிற இரண்டு வேலையை மட்டுமே டாடா பன்னோக்கு மருத்துவமனை தொடர்ந்து செய்து வருகிறது.

அந்த டாடா மருத்துவமனையும் இருக்கட்டும். கூடுதலாக எங்களுக்கு அரசு ஈட்டுறுதி மருத்துவமனையையாவது கட்டித் தாருங்கள் என்றும் கேட்டுப் பார்த்து விட்டோம். ஆனால் எதற்கும் செவி சாய்க்க மறுக்கிறது. தொழிலாளர்களுக்காகவே உருவாக்கப்பட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒரு தாலுகா தலைநகரில் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை இல்லை. இது தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிரானது என்கிற வாதத்தையும் நாங்கள் பயன்படுத்திப் பார்த்து விட்டோம். அசைந்து கொடுப்பதாக இல்லை பினராயியின் கம்யூனிச  அரசு.

வேறு வழியே இல்லாமல் மூணாறில் உள்ள டாட்டா மருத்துவமனையின் வழிகாட்டுதலில் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு நோயாளி செல்ல விரும்பினால், 139 கிலோமீட்டர்கள் பயணம் செய்ய வேண்டும். அதாவது குறைந்தது 5.30 மணி நேரப்பயணம். மொழிப் பிரச்சனை வேறு இருக்கிறது என்பதாலும், எஸ்டேட் தொழிலாளிகளுக்கென்று ஒரு மரியாதை கேரளாவில் தரப்படுவதில்லை என்பதாலும், கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு தோட்டத் தொழிலாளி கூட செல்வதில்லை.

மாறாக 89 கிலோமீட்டர் பயணம் செய்து, அதாவது இரண்டரை மணி நேரத்தில் தேனி சென்றுவிடக் கூடிய தூரம் என்பதால், தோட்டத் தொழிலாளிகள் தேனிக்கு வருவதையே தங்களுடைய முதல் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள். மொழிப் பிரச்சனையில்லை, மேலாக தங்களுடைய பூர்வீக மாநிலம் என்பதால் நம்பிக்கையோடு தேனிக்கு படையெடுக்கிறார்கள் எஸ்டேட் தமிழ் தொழிலாளர்கள்.

ஆனால் க.விலக்கில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்களை நடத்தும் விதம், கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொடுக்கப்படும் மரியாதையை விட கொடூரமானது.

கேரளாவில் தான் அவர்கள் மூன்றாம் தர குடிமக்கள் என்றால் தங்களுடைய பூர்வீக மாநிலத்திலும் அதுதான் நிலைமை என்பது வேதனையாக இருக்கிறது.

சரோஜா அம்மையார் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பிறந்த குடும்பத்திலிருந்து இங்கு வந்திருக்கிறார் என்கிற தகவலை தெரிவித்த பிறகும், அவருக்கு தரப்பட்ட சிகிச்சை பூஜ்ஜியம் என்பது தான் உண்மை. 1956 மொழி வழி பிரிவினைக்கு முன்னால் அவர்கள் இதே தேனி மாவட்டத்தில் இன்றைக்கு ஒரு தாலுகாவாக இருக்கும் பெரியகுளம் தாலுகாவுக்கு சொந்தக்காரர்கள் என்பதை க.விலக்கு மருத்துவமனை நிர்வாகம் மறந்து விடக்கூடாது. ஒருவேளை மொழிவழிப் பிரிவினையில் தேவிகுளமும் பீர்மேடும் தமிழகத்தோடு இருந்திருக்கும் என்று சொன்னால், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் அவர்களை இப்படி சங்கடமான சூழலில் நடத்தி இருக்குமா?

எல்லா மருத்துவமனைகளுக்கும் தமிழகம் முழுவதும் சென்று அதிரடி சோதனை நடத்தும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், ஒருமுறை க.விலக்கில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து அங்குள்ள நோயாளிகளின் நிலைமையை கேட்டறிய வேண்டும்.

இதே நிலைமை நீடித்தால், தேனி மருத்துவமனை நிர்வாகம் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், தோழமை இயக்கங்களுடன் இணைந்து போராட்டத்தை நடத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. எங்களை போராட துாண்டாதீர்கள். இடுக்கி மாவட்டத்தில் இருந்து வரும் தேயிலைத் தோட்ட தமிழ் தொழிலாளர்களை மரியாதையாக நடத்தி சிகிச்சை வழங்குங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News