விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி; குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீசார்
தேனி மாவட்டம் கூடலுாரில் வாய்க்கால்களை துார்வாராத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.;
விவசாயிகளை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்.
தேனி மாவட்டம், கூடலுாரில் நீர் வரத்து வாய்க்கால்கள் எதுவும் பல ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை. புதர் மண்டிக்கிடப்பதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் முறையாக கிடைப்பதில்லை. பல இடங்களில் வாய்க்கால்கள் உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது. வாய்க்கால்களை துார்வார வலியறுத்தி விவசாயிகள் பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் பலன் இல்லை.
இந்நிலையில், இன்று மதியம் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடலுார், குமுளி மெயின்ரோட்டோரம் திரண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து தீக்குளிக்கப்போவதாக அறிவித்து, மண்ணெண்ணெய் கேன்களுடன் வந்தனர். அதுவரை பாதுகாப்பு அளித்த போலீசார், விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி மேற்கொள்ளவும், குண்டுக்கட்டாக 20 பேரையும் துாக்கிச் சென்று தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் அடைத்தனர். பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்த பின்னர் விடுவித்தனர்.