தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு உழவு, நடவுப்பணிகள் மும்முரம்..!
தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக உழவு மற்றும் நடவுப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.;
தேனி மாவட்டத்திலோ, முல்லைப்பெரியாறு அணைப்பகுதியிலோ இதுவரை குறிப்பிட்டுச் சொல்லும் படியாக மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான சாரல் மட்டும் தலைகாட்டுகிறது. இருப்பினும் வரும் ஜூலை 17ம் தேதிக்கு பின்னர் மழை சற்று அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் தேனி விவசாயிகள் சற்று கூடுதல் நம்பிக்கையோடு மழைக்காக காத்திருக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. கடந்த ஜூன் முதல் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நாற்றங்கால் வளர்ப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. தற்போது முல்லைப்பெரியாறு அணையில் நீர் மட்டம் 119.50 அடியாக உள்ளது.
அணைப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மழைப்பொழிவு எதுவும் இல்லை. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதிக்கு பிறகு மழை மேலும் வலுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல் சாகுபடிக்கு எந்த பிரச்னையும் இருக்காது.
எனவே, விவசாயிகள் முழு நம்பிக்கையுடன் உழவு மற்றும் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நடவுப்பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடந்து வருகின்றன. பெண்களே பெரும்பாலும் நடவுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணிக்கு தொடங்கும் நடவுப்பணிகள் மாலை 6 மணி வரை நடைபெறுகின்றன. மிகவும் சவாலான இந்த வேலையை பெண் விவசாயிகள் மிகவும் எளிமையாக செய்கின்றனர். (சுமார் 12 மணி நேரம் குனிந்தவாறே நடவு செய்ய வேண்டும்). இவ்வளவு சிரமப்பட்டு நடவு செய்தாலும், அவர்களுக்கு சம்பளமாக தினமும் 1000ம் ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை கூலி கிடைக்கிறது. நடவுப்பணிகள் இந்த மாத கடைசிக்குள் பெரும்பாலும் நிறைவு பெற்று விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
வேலையாட்கள் பற்றாக்குறை
தமிழகம் முழுவதுமே விவசாயப்பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது சவாலான காரியமாக இருக்கிறது. பல கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை போன்ற நகரங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர். சில ஊர்களில் வட இந்தியர்கள் கூட விவசாய கூலிகளாக வேலை செய்கின்றனர். அந்த அளவுக்கு தமிழகத்தில் விவசாய வேலைகள் செய்வதற்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் மலைப்பிரதேசங்களில் தேயிலைப்பறிப்பதற்கும் வட இந்தியர்கள் வந்துவிட்டார்கள். இந்த தலைமுறையில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அவர்கள் வேறு வேலை தேடி பிற நகரங்களுக்குச் சென்று விடுகின்றனர். முந்தைய தலைமுறை மக்கள் மட்டுமே விவசாய பணிகளை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர் பற்றாக்குறையை வட இந்திய தொழிலாளர்கள் ஈடுகட்டுகின்றனர். அவர்கள் கூடுதலாக உழைப்பதற்கு அஞ்சுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை தங்கும் இடமும், குறைந்தபட்ச ஊதியம் இருந்தாலே போதும். அதனால் பலர் அவர்களையே வேலைக்கு வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.