உழவர்சந்தை திட்டத்தை முழு வேகத்தில் செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை
கருணாநிதி தொடங்கி வைத்த உழவர்சந்தை திட்டத்தை அவரது மகன் ஸ்டாலின் முழு வேகத்தில் நிறைவேற்ர நடவடிக்கை எடுத்து வருகிறார்
தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், விவசாயிகளின் உழைப்பினை இடைத்தரகர்கள் சுரண்டுவதை தடுக்கவும் உழவர்சந்தை திட்டத்தை கொண்டு வந்தார். அவர் திறந்து வைத்த உழவர்சந்தைகளில் 90 சதவீதம் சந்தைகள் விற்பனையில் சக்கைப் போடு போடுகின்றன.
அடுத்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.,கூட உழவர்சந்தை திட்டத்தை ஊக்கப்படுத்தா விட்டாலும், அதன் பலனை உணர்ந்து அமைதி காத்தது. தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் புதியதாக 100 உழவர்சந்தை திட்டங்களை செயல்படுத்தப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் உழவர்சந்தைகளை காலை, மாலை இரு நேரமும் திறக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதிக வேகத்தில் விற்பனை திறன் கொண்ட சிறப்பாக செயல்படும் உழவர்சந்தைகளை காலை, மாலை இரு நேரமும் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது உழவர்சந்தைகள் காலை 5 மணி முதல் பகல் 10 மணி வரை மட்டுமே செயல்படுகின்றன. இதில் வாய்ப்புள்ள சந்தைகளை இனிமேல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்க திட்டமிட்டு வேளாண் விற்பனைத்துறை மூலம் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு நேரமும் செயல்படும் உழவர்சந்தைகளில் விவசாயிகளை எப்படி அனுமதிப்பது. விற்பனை திறனை எப்படி மேம்படுத்துவது, எந்த மாதிரி விற்பனை அணுகு முறையினை கையாள்வது என சந்தைகளில் விற்பனை செய்யும் விவசாயிகளுடன் அந்தந்த சந்தை நிர்வாக அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்திற்கு பொதுவாக விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.