தேனியில் 5வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் கண்ணாயிரம் குடும்பத்தார்
தேனி நகராட்சி சிவராம் நகரில் பாரம்பரியமான காங்., குடும்பத்தை சேர்ந்த நாகராஜ் இரண்டாவது முறையாக கை சின்னத்தில் களம் இறங்கி உள்ளார்;
சிவராம் நகர் காங்., வேட்பாளர் நாகாஜ்.
தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் சிவராம்நகர் 14வது வார்டு எப்போதுமே காங்., கட்சிக்கு தான் ஒதுக்கப்படுவது வழக்கம். காரணம் இந்த வார்டு காங்., கோட்டையாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் கண்ணாயிரம் குடும்பம் செல்வாக்கு மிகுந்தது. இவரது மிக நெருங்கிய ரத்தசொந்த உறவுகள் ஒருங்கிணைந்து வாழ்வது இந்த வார்டில் மட்டுமே. கடந்த 1996ம் ஆண்டு கண்ணாயிரம் காங்., கவுன்சிலராக தேர்வு பெற்றார். அடுத்த உள்ளாட்சி தேர்தல் இவரது ரத்தசொந்த உறவினர் எ.நாகராஜ் கவுன்சிலராக தேர்வு பெற்றார். அடுத்தடுத்து நடந்த இரண்டு கவுன்சில் தேர்தலில் கண்ணாயிரத்தின் மனைவி காளீஸ்வரி வெற்றி பெற்றார்.
தற்போது எ.நாகராஜ் மீண்டும் களம் இறங்கி உள்ளார். தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் கவுன்சிலர்களாக இருந்தாலும், அன்பு, பாசம், அரவணைப்பினை மட்டுமே தங்கள் தரப்பில் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இந்த வார்டில் வசிக்கும் இவர்களது ரத்தசொந்தங்கள் அத்தனை பேரும் எந்த சூழலிலும் குழப்பம் விளைவிக்காமலும், மிக நேர்மையாக தொழில் செய்து இப்பகுதி மக்களின் அன்பை பெற்றுள்ளனர்.
இதனால் தான் கண்ணாயிரம் குடும்பத்தினரின் செல்வாக்கு இந்த வார்டில் கொடி கட்டி பறக்கிறது. தேர்தல் தவறாமல் இந்த வார்டினை இவர்களுக்கு ஒதுக்கி விடுகின்றனர். இம்முறையும் தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர்.
எ.நாகராஜ் இரண்டாவது முறையாக கவுன்சிலராக போட்டியிடுகிறார். கவுன்சிலராக நிற்பவர் ஒரு பெயருக்கு மட்டும் தான். மற்றபடி இங்கு கண்ணாயிரம் குடும்ப உறவுகள் அத்தனை பேரும் கவுன்சிலருக்கு உரிய வேலைகளையும், மக்கள் சேவைகளையும் செய்து வருகின்றனர். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறையில் இவர்களில் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் கல்வி உதவிக்கு இப்பகுதி மக்கள் இவர்களை தேடி வந்து விடுகின்றனர். தவிர அரசு உதவித்தொகை, தனிப்பட்ட உதவிகள், மருத்துவ உதவிகள் என மக்களுக்கு என்ன தேவையாக இருந்தாலும், கவுன்சிலர் பதவியில் இருக்கும் காலத்திலும், இல்லாத காலத்திலும் தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர். இம்முறையும் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு தனக்கு கிடைக்கும். நான் வெற்றி பெறுவது உறுதி என்கிறார் எ.நாகராஜ்.