பற்றி எரியும் கோடையிலும் தப்பிய தேனி மாவட்டம்
பற்றி எரியும் கோடையிலும் தேனி மாவட்டத்தில் மட்டும் வெயிலின் கடுமை சற்று குறைவாக உள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்கள் கோடை வெயிலில் சிக்கி பரிதவித்து வருகின்றன. ஈரோடு, வேலுார், திருண்ணாமலை பகுதிகளில் வெயில் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டுகிறது. இந்த சிக்கலில் தமிழகத்தின் பல மாவட்டங்கள் சிக்கி உள்ளன. பல இடங்களில் அனல் காற்றும் வீசுகிறது.
இப்படி ஒட்டுமொத்த தமிழகமும் பரிதவிக்கும் நிலையில், சூரிய பகவான் தேனி மாவட்டத்திற்கு மட்டும் இரக்கம் காட்டி வருகிறான். தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சதமடிக்ககூட இல்லை. அதேபோல் அனல் காற்றும் இல்லை. இடையில் ஓரிரு நாள் தேனிநகர் பகுதியில் மட்டும் சற்று கோடை வெயில் வாட்டி எடுத்தது.
இதே நேரம் நகரத்தை தாண்டி கிராமங்களுக்குள் சென்று விட்டால், வெயிலின் உக்கிரம் குறைந்து விடுகிறது. சில கிராமங்களில் அனல் காற்று வீசுவதில்லை. சில கிராமங்களில் இன்னும் கூட குளுமை நிலவுவது தான் மிகப்பெரிய ஆச்சரியம்.
தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஒண்ணரை கி.மீ., துாரத்தில் உள்ள அரண்மனைப்புதுார் கிராமத்தை தாண்டி அம்மச்சியாபுரம் ரோட்டில் சென்றால், குளுகுளு காற்றையும் அனுபவிக்கலாம். இன்னும் குரங்கனி, வருஷநாடு, சின்னசுருளி, சுருளி அருவி, பெரியகுளம் சோத்துப்பாறை, கும்பக்கரை பகுதிகளில் இந்த குளுகுளு இருப்பது மறுக்கவே முடியாத உண்மை.
சின்னமனுாரில் சற்று வெயில் பாதித்தாலும், ஒரு கி.மீ., தொலைவில் உள்ள மார்க்கையன்கோட்டை கிராமம் சென்று குச்சனுார் ரோட்டில் பயணித்தால் குளுமையை அனுபவிக்க முடியும். உத்தமபாளையத்தில் இருந்து காயமகவுண்டன்பட்டி வழியாக சுருளிக்கு பயணிப்பவர்களுக்கும் இதே அனுபவம் கிடைக்கும்.
குறிப்பாக லோயர்கேம்ப் சென்று சற்று இளைப்பாறுபவர்களும், சிறிதுநேரம் இங்கு எங்காவது தங்கி உறங்கிச் செல்லலாம் என்ற மனநிலைக்கு வருவார்கள். அந்த அளவு தேனி மாவட்டத்தில் இயற்கை வளம் கொட்டிக்கிடக்கிறது. இது தான் தேனி மாவட்ட மக்களை கோடையின் உக்கிரத்தில் இருந்து பாதுகாத்து வருகிறது.
ஒட்டுமொத்தமாக தேனி மாவட்ட மக்கள் கொடுத்து வைத்தவர்கள். வெயிலின் உக்கிரம் அவர்களை இன்னும் தீண்டவில்லை. தவிர பெங்களூர் போன்ற நகரங்கள் தண்ணீரை தங்கம் போல் பயன்படுத்தும் நிலையில், தேனியில் இப்போது வரை ஒருநாள் விட்டு ஒரு நாள் குறைந்தது 3 மணி நேரம் குடிநீர் சப்ளையாகிறது.
பெரியகுளம், போடி நகராட்சிகளில் குடிநீர் சப்ளை இன்னும் தாராளமாக உள்ளது. இந்த சீசனில் இதுவரை எங்குமே மக்கள் குடிநீர் கேட்டு குடத்துடன் ரோட்டிற்கு வரவில்லை. காரணம் கடந்த சீசனில் பெய்த மழையால் தேனி மாவட்டத்தில் அதிகரித்த நீர் வளம் இப்போது வரை தாக்குப்பிடித்து நிற்கிறது.
அதற்காக இப்போது தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்து விடாதீர்கள். தேனி மாவட்டத்தில் தங்கி இயற்கையை அனுபவிக்க ஏற்ற சுற்றுலா காலம் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் மட்டுமே. இந்த மூன்று மாதங்களில் சில நாட்கள் தேனி மாவட்டத்திற்கு வந்து தங்குபவர்கள்... நிச்சயம் இது போன்ற இடத்தில் தான் வீடு, வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள். அப்படி இயற்கை உங்களை வரவேற்கும்.