கொரோனா கட்டுக்குள் வந்தாலும் வேகமாகப் பரவுகிறது காய்ச்சல்
தேனி மாவட்டத்தில் காய்ச்சல் கடுமையாக பரவுவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்;
தேனி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும், காய்ச்சல் பரவல் கடுமையாக உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாகவே கொரோனா கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருகிறது. ஆனால் மழைப்பொழிவு அதிகம் இருப்பதாலும், பருவநிலை மாற்றத்தாலும், குடிநீரில் மழைநீர், கழிவு நீர் கலப்பது போன்ற பிரச்னைகள் பரவலாக இருப்பதாலும் காய்ச்சல் பரவி வருகிறது.
கடும் தலைவலி, உடல் வலி, கை கால் வலி, (சிலருக்கு மூச்சுத்திணறல்) போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சல் கடுமையாக பரவுகிறது. இந்த காய்ச்சல் வந்தால் சர்வசாதாரணமாக 105 டிகிரியை எட்டி விடுகிறது.காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் சோர்வுக்கு உள்ளாகி விடுகின்றனர். சிலருக்கு ஸ்டிராய்டு போன்ற மருந்துகள் பயன்படுத்தியே காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது.
மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகள் கடும் மந்த கதியில் உள்ளன. எந்த உள்ளாட்சியும் இந்த பணியில் விறுவிறுப்பு காட்டவில்லை. ஒட்டுமொத்த சுகாதாரத்துறையும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.இதனால் காய்ச்சல் பரவல் மாவட்டத்தில் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.