மோடி- அமித்ஷா வந்தாலும் என்னை அசைக்க முடியாது:சித்தராமைய்யா
மோடி, அமித்ஷா வந்தாலும் எனது வெற்றியை தடுக்க முடியாது என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தாராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் தனக்கு எதிராக பிரசாரம் செய்தாலும் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கர்நாடக சட்டசபைத் தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா உறுதிபடத் தெரிவித்தார்.
வயது மற்றும் தொலைவைக் காரணம் காட்டி தனது தொகுதியை வட கர்நாடகாவின் பாதாமியில் இருந்து கோலாருக்கு மாற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளது. கோலார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததில் இருந்தே சித்தராமையாவுக்கு எதிராக எதிர்மறையான பிரசாரம் தொடங்கியுள்ளது. சித்தராமையாவுக்கு எதிராக கோலார் தொகுதியில் கையேடு விநியோகிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வரட் -ம், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் எனக்கு எதிராக வந்து பிரசாரம் செய்தாலும் கோலாரில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். 2018 சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்ட பாதாமியிலும் இதே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமித் ஷா மற்றும் பிற மூத்த பாஜக தலைவர்களின் பிரசாரத்தையும் மீறி நான் வெற்றி பெற்றேன். இப்போதும் அது தான் நடக்கப்போகிறது என்று கூறினார்.
சித்தராமையா 2018 சட்டமன்றத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி மற்றும் பாதாமி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் சாமுண்டேஸ்வரி தொகுதியில் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜேடிஎஸ் வேட்பாளர் ஜி.டி. தேவகவுடாவிடம் தோல்வியடைந்தார். ஆனால் பாதாமி தொகுதியில் பாஜகவின் பி. ஸ்ரீராமுலுவுக்கு எதிராக சுமார் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது, பாதாமி மக்கள் நான் அங்கு போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால் வயது தொடர்பான பிரச்னைகள் மற்றும் தூரம் காரணமாக, கோலார் தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று அவர் கூறினார்.
மேலும், வரும் சட்டசபைத் தேர்தலில் 140 முதல் 150 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று சித்தராமையா நம்பிக்கை தெரிவித்தார். ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி என்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.