வாழ்வியல் ரசிகர்களா நீங்கள், இது உங்களுக்கு சரியான இடம்..!
மலை மீது வீடுகள், அடிவாரத்தில் சுற்றிலும் கண்மாய், நெல் வயல்கள், தென்னை, வாழை தோப்புகள் இருக்க வேண்டும்.;
இயற்கைக் சூழலில் வாழ்வது தான் சுகம் என பலரும் நினைக்கின்றனர். அது நுாறு சதவீதம் உண்மையும் கூட. தங்கள் வீட்டில் அமர்ந்து பார்த்தால், எதிர்வீடு தெரியக்கூடாது. வீட்டின் வாசலில் இருந்து பார்த்தாலும், ஜன்னல் வழியாக பார்த்தாலும், எதிரே நீர் நிறைந்த கண்மாய், ஆறுகள், பசுமையான நீரோடைகள், பச்சை பசேலென வளர்ந்து குலுங்கும் நெல் வயல்கள், விளைந்து குலுங்கும் தென்னை, மாந்தோப்புகள், வாழைத்தோட்டங்கள் இருக்க வேண்டும்.
அதனை பார்த்துக்கொண்டே சாப்பிட வேண்டும். இசை கேட்டு ரிலாக்ஸ் ஆக பொழுது போக வேண்டும். தங்கள் வீட்டில் படுக்கை அறை வழியாக வெளிகளை பார்த்துக் கொண்டே துாங்க வேண்டும். துாங்கும் போது சில்லென்ற காற்று உடலை வருட வேண்டும். விழித்தெழும் போது, சூரியகதிர்களை வரவேற்கும் வயல்வெளிகளையும், நீர் நிலைகளையும் கண்டு ரசிக்க வேண்டும்.
இப்படி ஒரு குடியிருப்பில் வாழ்ந்தால் எப்படியிருக்கும். இதனை விரும்பாத நகரத்து வாசிகளோ, கிராமத்து மக்களோ இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட இடம் எங்கயிருக்குனு கேட்கிறீங்களா... தமிழகத்தின் நுாற்றுக்கணக்கான நகரங்களி்ல இருக்கு. குறிப்பாக தேனி மாவட்டத்தில் மட்டும் இப்படிப்பட்ட மேலே வர்ணிக்கப்பட்ட விஷயங்களுடன் கூடிய இடங்கள் தேனி மாவட்டத்தில் நிறையவே உள்ளன. இப்போது மேலே உள்ள படத்தை பாருங்கள். இந்த படம் எடுக்கப்பட்ட இடம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சி. மேலே வர்ணிக்கப்பட்ட அத்தனை அம்சங்களும் இருக்கும்.
இது மட்டும் தானா என கேட்காதீர்கள். இது போன்று குறைந்தபட்சம் 20 முதல் 25 குடியிருப்புகள் தேனி மாவட்டம் முழுவதும் உள்ளன. அங்கெல்லாம் பெரும்பாலான மக்கள் வசிக்கின்றனர். பொதுவாகவே தேனி மாவட்டம் தமிழகத்தின் இரண்டாவது அழகிய மாவட்டம். அதில் மாற்றம் இல்லை.
முழுக்க இயற்கை செழிப்பு மிகுந்த மாவட்டம். ஆனால் இயற்கை வளத்தில் தேனி மாவட்டத்தை முந்தி நிற்கும் நீலகிரி மாவட்டத்தில் மலைகள் சூழ்ந்த இயற்கையே அதிகம் உள்ளன. ஆனால் தேனி மாவட்டத்தில் ஒரு படி தாண்டி, விவசாய நிலங்களும் குடியிருப்புகளும், கண்மாய்கள், நீரோடைகள், ஆறுகள், ஏரிகள், அருவிகள் அனைத்தும் குடியிருப்புகளுக்குள் கலந்தே இருக்கின்றன.
இது தான் தேனி மாவட்டத்தின் சிறப்பு அம்சம். இங்குள்ள இயற்கையே இப்படி என்றால், சுற்றுலா தலங்களின் சிறப்புகள் எப்படியிருக்கும். அதனை வார்த்தைகளில் வர்ணிப்பது மிகவும் சவாலான விஷயம். தமிழகத்தில் பிற மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தேனி மாவட்டத்தில் தங்களது உறவினர்கள் இருந்தால் வந்து ஒரு வாரமாவது தங்கி சுற்றிப்பாருங்கள்... அவ்வளவு சூப்பராக இருக்கும்.