தேனி ராஜவாய்க்கால் ஆக்கிரமி்ப்பு பாரபட்சமின்றி அகற்றப்படுமா?

தேனி ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு பாரபட்சம் இன்றி அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-03-11 04:56 GMT

ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள தேனி ராஜவாய்க்கால்.

தேனி ராஜவாய்க்கால் கொட்டகுடி ஆற்றில் இருந்து தேனி நகர் பகுதி வழியாக இரண்டரை கி.மீ., துாரம் சென்று கண்மாயில் சேருகிறது. இந்த வாய்க்கால் 60 அடி அகலத்தில் இருந்தது. 1700 ஏக்கருக்கும் மேல் இந்த வாய்க்கால் மூலம் பாசனம் பெற்றன. தேனி நகருக்குள்ளேயே வாய்க்காலும், பாசன பரப்புகளும் அமைந்திருந்தன. இதனால் வயல்கள் முழுவதும் வீடுகளாக மாறி விட்டன. வாய்க்கால் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு 6 அடியாக சுருங்கி விட்டது.

சுத்தமான பாசன நீர் ஓடிய இந்த வாய்க்கால் முழுக்க தற்போது சகதிநீராக காட்சியளிக்கிறது. இந்த வாய்க்காலை மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் போராடி வருகின்றனர். மதுரை உயர்நீதிமன்ற கிளையும் இதில் தலையிட்டு, வாய்க்காலை மீட்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் வழங்கி உள்ளது.

இந்த இடத்தில் தான் பிரச்னை தொடங்கி உள்ளது. வாய்க்கால் மொத்த நீளமான இரண்டரை கி.மீ., நீளமும் ஆக்கிரமிப்பில் தான் உள்ளது. பழைய பேருந்து நிலையமே வாய்க்காலை மூடித்தான் அமைக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் பகுதியில் 174க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தவிர வணிக நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. இதில் ஒரு சிலர் மட்டும் தங்களது ஆக்கிரமிப்பினை அகற்றக்கூடாது என தடை வாங்கி உள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தடை கொடுத்தால் அத்தனை பேருக்கும் தர வேண்டும். இல்லாவிட்டால் பாகுபாடு ஏதுமின்றி ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும். இன்னும் ஓரிரு நாளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது என வருவாய்த்துறையும், பொதுப்பணித்துறையும் அறிவித்துள்ளது.

ஆனால் வாய்க்கால் பரப்பு குறித்து இதுவரை தெளிவாக அளவீடு செய்யப்படவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டிய பகுதிகள் குறித்து தெளிவான வரையரை எதுவும் வகுக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு பகுதிகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை. இந்த சூழலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால், வசதி படைத்தவர்களும், அதிகார பலம் படைத்தவர்களும் தப்பி விடுவார்கள். ஏழைகளும், சாதாரண மக்களுக்கும் வீடுகளையும், வணிக நிறுவனங்களையும் இழந்து விடுவார்கள்.

எனவே தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு, ஆக்கிரமிப்பு பகுதிகளை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வாய்க்காலில் இனி நீர் வரத்து இருக்கப்போவதில்லை. காரணம் இந்த வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் பகுதிகள் முழுக்க வீடுகளாக மாறி விட்டன. இது போன்ற சிக்கலான சூழ்நிலைகளில் நீர்நிலைகள் பராமரிப்பு குறித்து முடிவு செய்ய உச்சநீதிமன்றம் தெளிவான வரைமுறைகளை வழங்கி உள்ளது. இதன்படி இருக்கும் நீர்நிலைகளை மட்டும் வலுவாக பாதுகாத்து நடவடிக்கை எடுத்தால் போதும் என்ற கோரிக்கையினையும் வைத்துள்ளோம் என்று  கூறினர்.

Tags:    

Similar News