எலக்ட்ரோ ஹோமியோபதி டாக்டர்கள் தேனி கலெக்டரை சந்தித்து முறையீடு
லட்சுமிபுரம் ஹோமியோபதி டாக்டர் தற்கொலையில் நீதிவழங்க வேண்டும் என தமிழகம் முழுவதும் இருந்து ஹோமியோபதி டாக்டர்கள் தேனி கலெக்டரை சந்தித்து முறையிட்டனர்.;
தற்கொலை செய்து கொண்ட தேனி ஹோமியோபதி மருத்துவர்.
தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் மருத்துவ இணை இயக்குனர் டார்ச்சர் காரணமாக துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட, டாக்டர் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என தமிழகம் முழுவதும் இருந்து டாக்டர்கள் வந்து தேனி கலெக்டரிடம் முறையீடு செய்தனர்.
தேனி அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் எலக்ட்ரோ ஹோமியோபதி டாக்டர் சீனிவாசன் என்பவர் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ இணை இயக்குனர் மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு தொல்லை தருவதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக டாக்டர் குடும்பத்தினர் புகார் எழுப்பினர். இறந்தவரும் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக பெரியகுளம் போலீசார் மருத்துவ இணை இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் மருத்துவ இணை இயக்குனர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் இருந்து எலக்ட்ரோ ஹோமியோபதி டாக்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்து தேனி கலெக்டர் முரளீதரனை சந்தித்து, 'தாங்கள் படிப்பிற்கான ஆவணங்கள், தங்களது மருத்துவமுறைகளை விளக்கி, டாக்டர் சீனிவாசன் தற்கொலைக்கு காரணமான இணை இயக்குனர் மீது நடவடிக்கை எடுத்து, அவரது குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும்' என வலியுறுத்தினர்.