கடைசி வரை போராடிய விஜயகாந்த் மகன்..!

விருதுநகர் தொகுதியில் வெற்றி யாருக்கு என்பதில் தேமுதிக- காங்கிரஸ் இடையே கடைசி வரை கடும் போட்டி நிலவியது.

Update: 2024-06-05 02:58 GMT

விஜய பிரபாகரன், மாணிக்கம்  தாகூர் (கோப்பு படம்)

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டன. இந்த 4 முனை போட்டியில் திமுக கூட்டணியானது மொத்தமுள்ள 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதற்கிடையே இத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிகவுக்கு விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர்(தனி), வடசென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். மறுபுறம் காங்கிரஸ் தரப்பில் தற்போதைய எம்பி மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் களமிறங்கினர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக இடையே ஆரம்பம் முதலே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்றின் முடிவில் 187 வாக்குகள் முன்னிலை பெற்ற விஜயபிரபாகரன், தொடர்ந்து 7-வது சுற்று வரை முதலிடத்தில் இருந்தார்.

அதன்பின் மாணிக்கம் தாகூரின் கை ஓங்கியது. எனினும், ஒவ்வொரு சுற்று முடிவிலும் இருவருக்கும் குறைந்த அளவிலான வாக்குகள் வித்தியாசமே இருந்தன. இறுதி சுற்றுக்கு முந்தைய 24-வது சுற்றின் முடிவில் மாணிக்கம் தாகூர் 4,633 வாக்குகள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தார். இதனால் வெற்றி யார் வசம் என்ற பரபரப்பு அரசியல் ஆர்வர்களிடம் தொற்றிக் கொண்டது. மறுபுறம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கோயம்பேடு கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சேர்ந்து மகனின் வெற்றிக்காக விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்பு அவர் மனம் உருகி பிரார்த்தனை செய்தார்.

இதற்கிடையே 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் விருதுநகரில் தேமுதிகவே போட்டியிட்டது. அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அழகர்சாமி 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை யாரும் எதிர்பாராதவாறு மாணிக்கம் தாகூருடன் இறுதி சுற்று வரை விஜயபிரபாகரன் விடாப்பிடியாக போட்டியை கொடுத்தது பரவலாக பேசுப்பொருளாகியுள்ளது.

விருதுநகர் தொகுதியில் வரும் 6 சட்டமன்றத் தொகுதிகளில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளும் அடக்கம். மொத்தமுள்ள 14 லட்சம் வாக்குகளில், அந்த 2 தொகுதிகளில் மட்டுமே 8 லட்சம் வாக்குகள் உள்ளன. தவிர விஜயகாந்த் சொந்த ஊரான இராமானுஜபுரம் இந்த தொகுதியில்தான் வருகிறது.

விஜயகாந்த் மறைவுக்குப் பிந்தைய அனுதாப வாக்குகளும் விஜயபிரபாகரனுக்கு பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. 2009 மக்களவைத் தேர்தலில் மூத்த தலைவரான வைகோவை எதிர்த்து வெற்றி பெற்றவர் மாணிக்கம் தாகூர். 2019 தேர்தலிலும் வெற்றிபெற்று எம்பியாக உள்ளார். இந்நிலையில் அவருக்கு முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய பிரபாகரன் கடுமையான போட்டியாக விளங்கினார்.

Tags:    

Similar News