தேனி மாவட்டத்தில் மூன்றாவது அலையில் இரண்டாவது உயிரிழப்பு
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.;
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 1513 பேர் கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியானது. இதன் அடிப்படையில் 542 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 23 பேர் மட்டுமே தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் கொரோனா தடுப்பூசி போடாத, 78 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனியை சேர்ந்த இவருக்கு சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இருந்தது. கடந்த ஜனவரி 8ம் தேதி அனுமதிக்கப்பட்ட இவர், நேற்று இரவு உயிரிழந்தார். இது மூன்றாவது அலையில் தேனி மாவட்டத்தில் இது இரண்டாவது உயிரிழப்பு ஆகும் என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால் தடுப்பூசி போட்டவர்களுக்கு மிக, மிக லேசான பாதிப்பு மட்டுமே ஏற்படுகிறது. எனவே மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.