கொட்டியது கோடைமழை: தேனியில் ‘‘குளுகுளு’’
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் மாவட்டத்தின் பருவநிலை குளுகுளுவென மாறியது.;
தேனி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்தது. மாவட்டத்தில் அத்தனை ஆறுகள், குளங்கள், ஏரிகள், அருவிகள் வறண்டன. எப்போதும் வளமாக காணப்படும் தேனி மாவட்டம் வெயிலில் தகித்தது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாகவே தேனி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. நேற்று மதியம் முதல் தற்போது வரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த பருவநிலையும் ‘‘குளுகுளு’’வென மாறியது. வெயிலின் தாக்கம் மறைந்து அக்டோபர், நவம்பர் மாத சீசன் போல் இருந்தது. சில்லென்ற காற்று, வெயில் முகமே தென்படாத குளுகுளுவென மேகமூட்டத்துடன் கூடிய பருவநிலை, ஈரப்பதத்துன் வீசிய காற்று என மாவட்டமே முழுமையாக மாறிப்போனது.
இந்நிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.): ஆண்டிபட்டி- 2.6, அரண்மனைப்புதுார்- 4.6, வீரபாண்டி- 12.4, பெரியகுளம்- 3.4, மஞ்சளாறு- 2, சோத்துப்பாறை- 12, வைகை அணை- 2, போடி- 14.2, உத்தமபாளையம்- 16.6, கூடலுார்- 14.2, பெரியாறு அணை- 8.4, தேக்கடி- 6.4, சண்முகாநதி- 22.4 என மழை பதிவானது.
இந்த மழையால் சுருளி அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அணைகளுக்கு நீர் வரத்து லேசாக அதிகரிக்க தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 116.85 அடியாக உயர்ந்தது.
வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. அணையில் இருந்து குடிநீருக்காகவும், மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காகவும் விநாடிக்கு 372 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீர் மட்டம் 53.04 அடியாக உள்ளது. அதேபோல் சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணை, மஞ்சளாறு அணைகளுக்கும் நீர் வரத்து தொடங்கி உள்ளது.