தேனி நகராட்சியை நாறடிக்கும் கோழி, மீன், இறைச்சி கழிவுகள்
தேனி நகராட்சி பகுதியில் இறைச்சி கடைகளின் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.
தேனி நகராட்சி பகுதியில் இறைச்சி கடைகளின் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேனி நகராட்சியில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடு, கோழி இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகள் உள்ளன. நகராட்சியில் ஆடு வதைக்கூடம் முறையாக செயல்படவில்லை. இதனால் ஆடுகளை ரோட்டோரங்களில் போட்டு அறுத்து இறைச்சி விற்பனை செய்கின்றனர்.
அதேபோல் கோழிக்கழிவுகளை எந்த கோழிக்கடையும் முறையாக அப்புறப்படுத்துவது இல்லை. ஆங்காங்கே கொட்டி விடுகின்றனர். குறிப்பாக தேனியை சுற்றிலும்் வனப்பகுதிகள் அதிகம் உள்ளன. குடியிருப்புகளை ஒட்டிய வனப்பகுதிகளில் இந்த கழிவுகளை கொட்டி விடுகின்றனர். நகராட்சியில் மீன் மார்க்கெட் கட்டும் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளது.
அத்தனை மீன் கடைகளும் ரோட்டோரங்களில் தான் செயல்பட்டு வருகின்றன. இந்த கழிவுகளையும் முழுமையாக முறையாக அகற்றவதில்லை. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த கழிவுகளை முறையாக கையாள வேண்டும் என நகராட்சி மக்கள் விடுத்த கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நகரில் 98 நிரந்தர துப்புரவு பணியாளர்களும் 150 தற்காலிக பணியாளர்களும் உள்ளனர். இவர்கள் மூலம் இந்த இறைச்சி கழிவுகள் சேகரிக்கப்பட்டு இதையும் நொதித்தல் முறையில் உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக தனியார் சிலர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு இந்த இறைச்சி கழிவுகள் சேகரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த இறைச்சி கழிவுகளை நுண்ணுயிர் உரமாக மாற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்ததும் நகராட்சியே இப்பணிகளை செய்யும். அதுவரை சுத்தமாக கழிவுகளை அகற்ற பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.