காய்கறி விற்கும் இடத்தினை அசுத்தம் செய்த குடிகாரர்களால் மக்கள் அவதி
தேனி உழவர்சந்தையில் காய்கறி விற்க ஒதுக்கப்பட்ட இடத்தை குடிகாரர்கள் அசுத்தம் செய்ததால் அங்கு காய்கறி விற்பனை நிறுத்தப்பட்டது;
தேனி உழவர் சந்தையில் விவசாயிகள் காய்கறி விற்பனைக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள மீறுசமுத்திரம் கண்மாய் சாலையில் ‛குடிமகன்கள்’ முகாமிட்டு வாந்தி எடுத்தும், இயற்கை உபாதைகளை கழித்தும்் நாசம் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் அந்த இடத்தை மாற்றி விட்டனர்.
தேனியில் உழவர்சந்தை மீறுசமுத்திரம் கண்மாய் கரை அருகே உள்ளது. உழவர் சந்தைக்கும் கண்மாய்க்கும் இடையே தார்ரோடு செல்கிறது. இந்த ரோட்டோரம் ஒரு பகுதியில் உழவர் சந்தை, அடுத்தடுத்து குடியிருப்புகள் அமைந்துள்ளன. பெரியகுளம் சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் மீறுசமுத்திரம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த ரோடும் தார்ரோடாக அமைக்கப்பட்டுள்ளது. உழவர்சந்தையில் 70 விவசாயிகள் காய்கறி விற்பனை செய்கின்றனர். உள்ளே இடம் கிடைக்காத விவசாயிகள் மீறுசமுத்திரம் கண்மாய்க்கு செல்லும் சாலையோரம் இருபுறமும் அமர்ந்து காய்கறி விற்பனை செய்தனர்.
இதனால் சந்தைக்கு பொதுமக்கள் காய்கறி வாங்க வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனை அறிந்த உழவர் சந்தை நிர்வாகம் இந்த சாலையில் காய்கறி விற்பனை செய்பவர்களுக்கு மீறுசமுத்திரம் கண்மாய்க்கும், உழவர்சந்தைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள சாலையில் இடம் ஒதுக்கி கொடுத்தது. கண்மாய்க்கு செல்லும் சாலையில் காய்கறி வாங்க வரும் விவசாயிகள் வாகனங்களை பார்க்கிங் செய்ய இடம் ஒதுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பொது மக்கள், விவசாயிகள் இடையே பலத்த வரவேற்பினை பெற்றது. சந்தைக்கு காய்கறிகள் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. விவசாயிகள் பகல் 11 மணிக்குள் வியாபாரத்தை முடித்து கிளம்பி விடுகின்றனர்.
ஆனால் மீறுசமுத்திரம் கண்மாய் கரை சாலையை ஒட்டி டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடை பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது. இங்கு பாட்டில்கள் வாங்கும் குடிமகன்கள் இந்த சாலையில் அமர்ந்து குடிக்கின்றனர். அதிக போதையில் வாந்தி எடுத்தும், சாலையோரங்களில் இயற்கை உபாதைகளை கழித்தும் அசுத்தம் செய்து விடுகின்றனர். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு உழவர் சந்தையில் வியாபாரம் தொடங்க வேண்டும்.
எனவே முதல்நாள் இரவே காய்கறிகளை கொண்டு வந்து வைக்கும் விவசாயிகள், அசுத்தமடைந்தது கிடக்கும் அந்த இடத்தை சுத்தப்படுத்தும் முன் கடும் அவதிக்குள்ளாகி விடுகின்றனர். சிலர் அருவருப்படைந்து கடை போடாமலேயே வெளியில் சென்று விட்டனர். இதனால் உழவர் சந்தை நிர்வாகம் விவசாயிகளுக்கு சந்தைக்கு வரும் பாதையிலேயே நல்ல முறையில் இடம் ஒதுக்கி கொடுத்து விட்டது. இந்த பாதையில் சி.சி.டி.வி., கேமராக்கள் இருப்பதாலும், திருமண மண்டம், தாலுகா அலுவலகம், வணிக வளாகம் இருப்பதாலும் குடிமகன்கள் வந்தால் சிக்கிக் கொள்வார்கள். எது எப்படி இருந்தாலும் உழவர்சந்தை அதிகாரிகளின் அருமையான ஒரு திட்டத்தை குடிமகன்கள் சிதைத்து விிட்டனர் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.