டாஸ்மாக் கடைகளில் மது அதிக விலைக்கு விற்கப்படுகிறதா?
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் கூடுதலாக விலை வைத்து கொள்ளையடிக்கப்படுவது தெரியும். ஆனால் பார்கொள்ளை பற்றி யாருக்கும் தெரியாது.;
தமிழகம் முழுவதம் டாஸ்மாக் கிடைக்காத இடமே இல்லை என்ற சூழ்நிலை உருவாகி வி்ட்டது. பார் டெண்டர்கள் விடப்படாவிட்டாலும், யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களது கைகளே ஓங்கி நிற்கிறது.
டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது என்பது ஊரறிந்த விஷயம். இப்போது இது அங்கீகரிக்கப்படாத ஒரு சட்டநடைமுறையாகவே மாறிப்போனது. இதெல்லாம் குடிமகன்கள் நிதானமாக இருக்கும் போது நடக்கும் விஷயங்கள். இதனால் இதனை பற்றி பேசிப்பயனில்லை.
டாஸ்மாக் பார்களில் அமர்ந்து குடிமகன்கள் மது அருந்தும் போது, குறிப்பாக குறைந்தபட்சம் 3 பேர் அல்லது நான்கு பேர், அதற்கும் கூடுதல் எண்ணிக்கையில் அமர்ந்து தான் மது அருந்துகின்றனர். ஒவ்வொருவரும் தனித்தனி வகையான மது ஆர்டர் தருகின்றனர். அதேபோல் கப்பைகிழங்கில் ஆரம்பித்து, முட்டை, சுக்கா, பயறு, சிகரெட், கூல் டிரிங்ஸ், வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர் என தனித்தனியாக ஆர்டர் செய்கின்றனர். இதனால் வாங்கும் பட்டியல் பெரியதாகி விடுகிறது.
மது அருந்தி முடித்ததும் அத்தனை பேருமே போதையில் தள்ளாட தொடங்குகின்றனர். அப்போது போய், அவர்கள் சாப்பிட்ட மது முதல் சிகரெட் வரை வாங்கிய அத்தனையும் சேர்த்து பெரிய பட்டியல் போட்டு, பில் தருகின்றனர். அந்த பில்லில் வேண்டுமென்றே 100 ரூபாய் முதல் 200 ரூபாய் கூட்டிப்போட்டு விடுகின்றனர். (டிப்ஸ் தனி). 95 சதவீதம் குடிமகன்கள் பில்லை பார்த்ததும் டோட்டல் கூட்டாமல், (போதையில் கூட்ட முடியாதே) பணத்தை செட்டில் செய்து விடுகின்றனர். ஓரிருவர் மட்டுமே டோட்டல் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படி கண்டுபிடித்தாலும் அது அவசரத்தில் நிகழ்ந்த தவறு போல் ஒரு நாடகம் நடத்தி, 'சாரிண்ணே..' என கூறி பில்லை திருத்தி தருகின்றனர். போதையில் குடிமகன்களுக்கு பார்களில் மட்டும் மன்னிக்கும் குணம் வந்து விடுகிறது. (வெளியில் வந்த பின்னர் வில்லங்கள் நடப்பது வேறு கதை). இதனால் இந்த சிறு தவறை பெரிதுபடுத்துவதில்லை. இப்படி தினமும் பல ஆயிரம் ரூபாய் பணம் பார்களில் கொள்ளையடிக்கப்பட்டு பங்கு பிரிக்கப்படுகிறது. குடிமகன்களை பொறுத்தவரை எரியும் வீட்டில் எடுத்தவரை லாபம் என்ற கதை தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது.