எங்கள் வெற்றிக்கு திமுகவே போதும் -அதிமுக முக்கிய பிரபலங்கள் நம்பிக்கை
திமுக.,வில் நிலவும் கோஷ்டி குழப்பங்களே எங்களை வெற்றி பெற வைத்து விடும் என அதிமுக முக்கிய பிரபலங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்
தேனி, பெரியகுளம் நிலவரம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தனியாக நின்னாலும் ஒற்றுமையாக நிற்கிறது. தி.மு.க., வலுவாக இருந்தாலும் சிதறிப்போய் கிடக்கிறது என அ.தி.மு.க.,வினர் கூறுவதில் உண்மை உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தனித்து களம் காண்கிறது. இதனால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம் என பலரும் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்த அ.தி.மு.க., நாங்கள் தனியாக நிற்பது உண்மை தான். ஆனால் ஒற்றுமையாக இருக்கிறோம். இதுவரை ஒற்றுமையாக இருந்த தி.மு.க., இப்போது நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிக்கிடக்கிறது. தி.மு.க.,வின் அதிருப்தி வேட்பாளர்களே அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக களம் காண்கின்றனர். பல இடங்களில் பகிரங்கமாகவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பல இடங்களில் தங்கள் ஆதரவுடன் வலுவான வேட்பாளரை களம் இறக்கி வருகின்றனர். பலர் தனக்கு சீட் கிடைக்காததற்கு காரணமாவர் ஜெயிக்க கூடாது என திரைமறைவு வேலை செய்கின்றனர். சிலர் பகிரங்கமாக எதிரணி வேட்பாளருக்கு செலவுக்கு கூட பணம் தர தயாராக உள்ளனர். வெற்றி வாய்ப்புள்ள தி.மு.க.,வில் இத்தனை தடைகள் உருவாகி உள்ளன. இதனையெல்லாம் சமாளிக்கவே தி.மு.க., வேட்பாளர்களுக்கு போதும்... போதும் என்றாகி விடும். இந்த கேப்பில் நாங்கள் வெற்றி வாகை சூடி விடுவோம் என அ.தி.மு.க.,வினர் நம்பிக்கையுடன் பதிலளித்து வருகின்றனர். சில தி.மு.க., நிர்வாகிகள் இதற்கு பதிலளிக்காவிட்டாலும், மவுனமாக குழப்பம் இருப்பதை ஒத்துக்கொள்கின்றனர்.