தி.மு.க., தேர்தல் முடிவுகள் நிறுத்தம்: தேனி வருகிறது மேலிட சிறப்புக்குழு
தேனி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க., நிர்வாகிகளின் தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.;
தமிழகம் முழுவதும் தி.மு.க., உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.தேனி தெற்கு மாவட்டத்தில் தி.மு.க.,விற்கும் பெரும் கலவரமே நடந்து வருகிறது. குறிப்பாக உத்தமபாளையம், கம்பத்தில் தி.மு.க.,வி்ல் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனால் வடக்கு மாவட்டத்தில் எங்குமே பிரச்னை இல்லை. மிகவும் சைலண்ட் ஆக நிர்வாகிகள் மனு தாக்கல் செய்து விட்டு முடிவுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை வார்டு செயலாளர்களின் முடிவுகள் கூட அறிவிக்கப்படவில்லை. ஆனால் எந்தெந்த வார்டுகளுக்கு யார், யார் நிர்வாகிகள் என்ற விவரம் எல்லாம் தயாராக உள்ளது. இன்று மாலைக்குள் நகர செயலாளர்கள், பேரூர்கழக செயலாளர்கள் முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த முடிவுகளும் வெளியாகவில்லை.
இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி, பெரியகுளம், போடி தி.மு.க., நகர செயலாளர்களாக இருந்த மூன்று பேரும் தற்போது சஸ்பெண்ட்டில் உள்ளனர். இவர்கள் கட்சிக்காக கடுமையாக வேலை பார்த்து வெற்றியை தேடித்தந்தவர்கள். கட்சி கட்டளையை மீறிய குற்றத்திற்காக மேலிடம் சஸ்பெண்ட் செய்துள்ளது. தற்போது தி.மு.க.,விற்கு பா.ஜ.,வால் மிகப்பெரிய சவால் உருவாகி வரும் நிலையில், கட்சியில் மேலிடம் முதல் அடித்தட்டு வரை தெளிவான, தீர்க்கமான முடிவுகள் எடுத்து, சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் தேவை என மேலிடம் கருகிறது. சிறு, சிறு குற்றங்களுக்காக வேலை செய்தவர்களை விரட்டி விட்டு எப்படி கட்சியை வழிநடத்துவது என்ற கேள்வியையும் தி.மு.க.,வில் பலர் எழுப்பி உள்ளனர்.
இதனால் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூன்று நகர செயலாளர்களையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர மேலிடம் திட்டமிட்டுள்ளது. அதேசமயம் அவர்களுக்கு கிடுக்குப்பிடி போடவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக தேனி வடக்கு மாவட்டம் முழுவதும் தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் கட்சி மேலிட சிறப்புக்குழு தேனி வருகிறது. இங்கு மிகப்பெரிய விசாரணை நடைபெற உள்ளது. அந்த விசாரணை அடிப்படையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரப்படலாம். அவர்களுக்கு பதவிகள் வழங்கப்படலாம் என தி.மு.க., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியும் வரும் மே 19ம் தேதிக்குள் தேனி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் குறித்த தெளிவான பட்டியல்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.