தேனியில் நாடார் சமூகத்திற்கு திமுக நகர செயலாளர் பதவி

Nadar Community - தேனியில் திமுக நகர செயலாளர் பதவியை நாடார் சமூகத்திற்கு வழங்கியது அக்கட்சியின் புதிய தேர்தல் வியூகமாக பார்க்கப்படுகிறது;

Update: 2022-07-30 08:30 GMT

தேனி தி.மு.க.,நகர செயலாளர் நாராயணபாண்டி.

Nadar Community - தேனி நகராட்சியின் மக்கள் தொகையில் அறுதிப்பெரும்பான்மை எண்ணிக்கையில் நாடார் சமூக மக்கள் உள்ளன. மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 14 வார்டுகளின் கவுன்சிலர்களை நிர்ணயிக்கும்  பலம் நாடார் சமூகத்திற்கு உண்டு. ஆனால் இதற்கு ஏற்ப நாடார் சமூகத்திற்கு தி.மு.க. பிரதிநிதித்துவம் வழங்குவது இல்லை. இதனால் நாடார் சமூக மக்கள் சற்று அதிருப்தியுடன் இருந்தனர்.

இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் நாடார் சமூகத்தை சேர்ந்த மூன்று பேரை அமைச்சராக்கிய முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் பதவியையும் நாடார் சமூகத்திடம் கொடுத்தார். இந்நிலையில் வரும் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி பதவிகளில் திறன் வாய்ந்த நபர்களை தி.மு.க. நியமித்து வருகிறது. தேனியில் கட்சியை வலுவுடன் நடத்தவும், மேலும் வளர்ச்சி அடைய செய்யவும் சரியான நபரை நியமிக்க வேண்டும் என தி.மு.க. மேலிடம் திட்டமிட்டது.இந்த ரேஸில் பலர் இருந்தாலும், கவுன்சிலர் நாராயணபாண்டி தான் தி.மு.க. நகர செயலாளர் என மேலிடம் இன்று அறிவித்துள்ளது. இந்த தேர்வு மிகவும் சரியானதே, தவிர எதிர்கால திட்டமிட்ட கண்ணோட்டத்துடன் இந்த பதவி நாராயணபாண்டிக்கு வழங்கப்பட்டுள்ளது என அரசியல்  நோக்கர்கள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறியதாவது: நாராயணபாண்டி பாரம்பரியம் மிகுந்த நாடார் குடும்பத்தின் வாரிசு மட்டுமின்றி இவர்களது மூதாதையர்கள் பலர் அரசியல் கட்சிகளில் பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள். தவிர மிகப்பெரிய வணிக குடும்பத்தை சேர்ந்த நாராயணபாண்டி நான்கு முறை கவுன்சிலராக தேர்வு பெற்றும், சிறு அளவில் கூட கெட்ட பெயர் சம்பாதிக்காதவர். நான்கு முறையும் தனக்கு எதிராக நின்று களம் கண்ட வேட்பாளர்களை டெபாஸிட் இழக்க செய்துள்ளார்.

தவிர சட்டசபை, பார்லிமெண்ட் தேர்தல்களிலும் தான் உள்ளாட்சி தேர்தலி்ல் வார்டில் வாங்கி ஓட்டுக்களின் எண்ணிக்கைக்கு ஈடாக ஓட்டுக்களை பெற்றுத்தந்து தனது கட்சி மேலிடத்தின் நம்பிக்கையினை பெற்றவர். அனைத்து சமூகத்தினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அமைதியான சுபாவம் படைத்தவர். அதேசமயம் தேர்தல் வேலைகளில் அ.தி.மு.க.,வினை வீழ்த்தும் அளவு வல்லமையும் பெற்றவர். தற்போது கூட உள்ளாட்சி தேர்தலில் வார்டுகள் பிரிக்கப்பட்டு குழப்பங்கள் நிறைந்த நிலையிலும், அ.தி.மு.க. வேட்பாளரை வீழ்த்தியே வெற்றி பெற்றுள்ளார்.

தி.மு.க.,வில் மிக நீண்டகாலமாக பயணித்த நிலையிலும், 20 ஆண்டுகள் கவுன்சிலராக இருந்த நிலையிலும், சிறு அளவில் கூட எதிர்ப்பினை சம்பாதிக்காதவர். ஊழல் குற்றச்சாட்டு, பண மோசடி, வேலை வாங்கித்தருவதாக மோசடி என எந்த புகாரிலும் சிக்கவில்லை. அரசியல் வாழ்வில் மிக நேர்மையானவர் என பெயர் பெற்றவர். இவரை தி.மு.க.வின் ஐபேக் டீம், சபரீசனின் விசாரணைக்குழு,  தி.மு.க. மேலிட பார்வையாளர் குழு, தமிழக உளவுத்துறை  அறிக்கை என அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டே மேலிடம் நியமித்துள்ளது.

ஏற்கெனவே தேனியில் உள்ள நாயுடு, நாயக்கர் சமூக மக்கள் (அவர்கள் சமூகத்திற்கு நகராட்சி தலைவர் பதவி கொடுத்ததால்) தி.மு.க.வின் மீது நல்ல அபிப்பிராயத்தில் உள்ளனர். தற்போது நாடார் இன மக்களையும் நாராயபாண்டிக்கு பதவி கொடுத்ததன் மூலம் தி.மு.க.வளைத்து போட்டுள்ளது. தேனியில் உள்ள அடுத்தடுத்த இரு பெரும்பான்மை சமூகங்களை தி.மு.க. வளைத்து போட்டுள்ளதில் எதிர்கால அரசியல் திட்டமும், ஆதாயமான செயல்பாடுகளும் உள்ளன என அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News