தலைவர் வேட்பாளர்களை வார்டிலேயே சுருட்ட திட்டம்
தலைவர் பதவி வேட்பாளர்களை வார்டிலேயே சுருட்ட திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் வரிந்து கட்டி வியூகங்கள் வகுத்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகளுக்கு வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. தலைவர் பதவியை வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் தான் தேர்வு செய்வார்கள். வெற்றி பெற்ற கவுன்சிலர் தான் தலைவர் பதவியில் நிற்க முடியும்.
எனவே எந்தெந்த நகர்ப்புற உள்ளாட்சியில் யார்? யார்? தலைவர் பதவிக்கு வரலாம் என கணிப்புடன் களம் இறங்கி உள்ளனரோ அவர்களை வார்டிலேயே சுருட்ட தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் தீவிரமாக வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
குறிப்பாக தேனி நகராட்சிக்கு ரேணுப்பிரியா பாலமுருகன் தி.மு.க.,வின் தலைவர் பதவி வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அவர் போட்டியிடும் 10வது வார்டிலேயே அவரை வீழ்த்த அ.தி.மு.க., வியூகம் வகுத்து மிக, மிக வலுவான பெண் வேட்பாளரை களத்தில் இறக்கி உள்ளது. தவிர செல்வம், செல்வாக்கு இரண்டையும் தனது வேட்பாளருக்கு தேவைப்படும் அளவுக்கு அதிமுக வழங்கி வருகிறது. ஒரே ஒரு கண்டிசன், தி.மு.க.வேட்பாளரை வீழ்த்தியே ஆக வேண்டும்.
இதே பாணியை திமுகவும் கையில் எடுத்துள்ளது. யார் அதிமுகவி்ல் தலைவர் பதவிக்கு எதிராக வருவார் என நினைக்கின்றனரோ அவர்களை வார்டில் சுருட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த வியூகங்களை எழுத்தில் வடிப்பது கடினம். அந்த அளவு மதிநுட்பம் நிறைந்த வியூகமாக உள்ளது.
இருதரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் களம் இறங்கி உள்ளதால் உள்ளாட்சி தேர்தல் களம் அனல் பறக்கிறது.