மூன்றாகப் பிரிகிறது சென்னைப் பெருநகரம்
Chennai Metropolitan Area -சென்னை பெருநகரப் பகுதியை, மத்தியப் பகுதி, வடக்கு, தெற்கு என்ற 3 ஆகப் பிரிக்க பெருநகர வளர்ச்சி ஆணையம் முடிவு செய்துள்ளது
Chennai Metropolitan Area - சென்னை பெருநகரப் பகுதி தற்போது 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. முந்தைய அதிமுக அரசு, இதனை 8,878 சதுர கிலோமீட்டராக உயர்த்தி, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக மாற்ற திட்டமிட்டது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சென்னை பெருநகரப் பகுதியை மறுசீரமைக்கவும், நகரின் பெருநகரப் பகுதியை 5,904 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளது. அதாவது, தற்போது 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை பெருநகரப் பகுதியை 5,904 சதுர கிலோமீட்டராக உயர்த்துவதுடன், அதனை சென்னை பெருநகர மத்தியப் பகுதி, சென்னைப் பெருநகரம் - வடக்கு மற்றும் சென்னைப் பெருநகரம் - தெற்கு என மூன்றாகப் பிரிக்கும் திட்டத்தை சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் தமிழக அரசிடம் முன்மொழிந்துள்ளது.
சென்னை பெருநகர மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நிலையில், அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுத பூஜை விடுமுறைக்குப் பிறகு (அக். 5 ஆம் தேதிக்குப் பிறகு) நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த திட்டம், ஏற்கெனவே விரிவாக்கப்பட்ட பகுதிகளை இது கொண்டிருக்காது என்றும் இதற்கென தனியாக திட்டங்கள் தயாரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை பெருநகர வடக்குப் பகுதி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி (பகுதியளவு), அரக்கோணம் (பகுதியளவு), திருவள்ளூர், பூந்தமல்லி (பகுதியளவு) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 8 தாலுகாக்களைக் கொண்டு 2,908 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும். அதுபோல சென்னை பெருநகர தெற்குப் பகுதி 1,809 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிவடையும்.
இது காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், குன்றத்தூர் (பகுதியளவு) மற்றும் வண்டலூர் (பகுதியளவு) தாலுகாக்களைக் கொண்டிருக்கும். மேற்குறிப்பிட்ட இரண்டு பகுதிகளுக்கும் தனித்தனியாக மண்டல அலுவலகங்கள் இருக்கும். மேலும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் திட்டமிடல் பிரிவுகள் சென்னை பெருநகர மத்தியப் பகுதியுடன் இணைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2