கண்ணகி அறக்கட்டளையுடன் பெரியாறு விவசாயிகள் மோதல்

கண்ணகி கோயிலை கேரளாவிற்கு தாரை வார்த்துக் கொடுக்கும் அதிகாரத்தை தனியார் அறக்கட்டளைக்கு யார் கொடுத்தது?

Update: 2023-04-19 03:23 GMT

மங்கலதேவி கண்ணகி கோவில்

தேனி மாவட்டத்தில் கேரள எல்லையில், தேனி வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது கண்ணகி கோயில். இதற்கான பாதை கேரளா வழியாக உள்ளது. தேனி மாவட்ட வனப்பகுதி வழியாக பாதை அமைக்க தமிழக அரசு முயற்சி எடுக்கவில்லை. இதனால் தமிழர்களும் கேரளா வழியாகவே கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டும். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் கேரள அரசு கண்ணகி கோயிலுக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

தவிர கேரள மக்கள் கண்ணகியை பத்திரகாளியாக வர்ணித்து அவர்களும் இந்த கோயிலை சொந்தம் கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் வரும் சித்ரா பௌர்ணமி நாளன்று மட்டும் இங்கு திருவிழா நடக்கும். கோயில் வளாகத்தில் உள்ள ஒரு கோயிலில் கண்ணகியை தமிழர்களும், இன்னொரு கோயிலில் பத்திரகாளியை கேரள மக்களும் வழிபட்டு வருகின்றனர். இதுவரை பக்தர்கள் மத்தியில் எந்த பிரச்னையும் எழுந்தது இல்லை. இரு மாநில பக்தர்களும் இரண்டு கோயில்களிலும் வழிபடுகின்றனர்.

இதற்கிடையில் கண்ணகி கோயில் அறக்கட்டளை என்ற அமைப்பு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இவர்கள் தாங்கள் ஒரு பெரிய அதிகாரம் பெற்ற அமைப்பு போல் செயல்பட்டு கேரள முதல்வரிடம் கண்ணகி கோயில் தொடர்பான பல கோரிக்கைகளை வைத்து கோயில் கேரளாவிற்கு சொந்தம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஆனால் தமிழக இந்து சமய அறநிலையத்துறை தான் கண்ணகி கோயிலை நிர்வகித்து வருகிறது. இந்த அறநிலையத்துறையும் இந்த அறக்கட்டளையின் போக்குக்கு கண்டனம் எதுவும் தெரிவிக்கவி்ல்லை. மாறாக கண்ணகி கோயில் திருவிழா நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையினையும் தேக்கடியில் நடத்துகின்றனர். அதாவது கேரளா தான் கண்ணகி கோயில் விழாவிற்கு பிக்பாஸ் என்பது போல் ஒரு தோற்றத்தை கேரள அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர்.

தேனி ஆட்சியரும் அந்த கூட்டத்தில் பங்கேற்று கேரளா இதற்கு ஒத்துக் கொண்டது, அதற்கு ஒத்துக் கொண்டது என ஒரு வெற்று அறிக்கை விட்டு பெருமை பறைசாற்றிக் கொள்கின்றனர். தமிழர்களின் கோயில் வழிபாட்டிற்கு கேரளா என்ன சலுகை வழங்குவது, நமது உரிமையை பெற கேரளாவிடம் அனுமதி பெற வேண்டுமா என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கேள்வி எழுப்பி வருகிறது.

இந்த ஆண்டு விழாவிற்கான பேச்சு வார்த்தையில் பங்கு பெற பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினரும் தேக்கடி சென்றனர். ஆனால் கேரள அரசு கண்ணகி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளை மட்டும் உள்ளே அனுமதித்து விட்டு, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை. இதனை தேனி ஆட்சியரும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கண்ணகி அறக்கட்டளை, ‘கண்ணகி பெயரை சொல்லி, உலகம் முழுவதும் பணம் வசூலித்து சுவாகா செய்கிறது. இதனை தடுக்கவில்லை. கண்ணகி கோயிலை கேரளாவிற்கு தாரை வார்த்துக் கொடுக்க முயற்சிக்கிறது. அதற்கு தமிழக அரசும் துணை போகிறது’ என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் பெரும் பிரச்னை கிளப்பி வருகின்றனர்.

இது குறித்து இன்று தமிழக முதல்வருக்கும், முக்கிய அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி உள்ளனர். கண்ணகி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தேனி மாவட்ட நிர்வாகம் எப்போதும் போல் இதனை வேடிக்கை பார்த்து வருகிறது. தற்போது கண்ணகி கோயில் விஷயத்தில் தமிழகத்தில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் கேரளாவிற்கு சாதகமாக அமைந்து வருகிறது என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் பதட்டப்படுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டால் மட்டுமே தமிழகத்தின் வரலாற்றுப்பதிவான கண்ணகி கோயில் தமிழ்நாட்டிற்கு சொந்தமாகும்.

Tags:    

Similar News