வேட்பாளர்கள் தேர்வில் பாரபட்சம்: திமுகவில் நிலவும் கடும் அதிருப்தி
தேனி மாவட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் தேர்வில் பாரபட்சம் நிலவுவதாக அக்கட்சி முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்
தேனி மாவட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வில் பாரபட்சம் நடந்து வருவதாக கூறி, தி.மு.க., நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
தேனி மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சீட் வாங்குவதில் ஏற்பட்ட போட்டியால் இதுவரை இரண்டு இடங்களில் கடும் மோதல் ஏற்பட்டு போலீசார் தலையிட்டுள்ளனர். தி.மு.க.,வினரிடையே இருந்த போட்டி தற்போது கடும் அதிருப்தியாக மாறி உள்ளது.
தேனி மாவட்டத்தில் சீனியர்களும், கட்சிக்கு பல ஆண்டுகளாக உழைத்தவர்களையும் புறக்கணித்து விட்டு, புதிதாக கட்சிக்கு வந்தவர்களையும், பணம் வைத்திருப்பவர்களையும் மட்டுமே வேட்பாளர்களாக தேர்வு செய்வதாக பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். எனவே தங்களுக்கு சீட் கிடைக்காவிட்டால், தங்களது வார்டில் சுயேட்சையாக களம் காண இருப்பதாக தி.மு.க., நிர்வாகிகள் பலர் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
பலரும் வேட்புமனு தாக்கல் செய்து விட்ட நிலையில், இந்த பிரச்னை பெரிதாகி விடாமல் இருக்க தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் விடிய, விடிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.