பாழடைந்து கிடக்கும் தேனி புது பஸ்ஸ்டாண்ட் பூங்கா
தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி பூங்கா பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் கிடக்கிறது.;
இதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் நகராட்சி பூங்கா பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு புல்வெளிகள், செயற்கை நீரூற்றுகள், குழந்தைகள் விளையாடும் சறுக்குகள், ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டன. மற்றும் மின்விளக்குகளும் அமைக்கப்பட்டது. தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த பூங்கா தற்போது மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து கிடக்கிறது. இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. மக்கள் செல்லாததால் இரவில் சமூக விரோதிகள் அடைக்கலமாகின்றனர். இதனால் இப்பகுதியில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன.
இதனை தடுக்க இந்த பூங்காவை சீரமைத்து, மின்விளக்குகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தேனி நகர மக்களுக்கு வேறு பொழுது போக்கு வசதிகள் இல்லை. தவிர பஸ்ஸ்டாண்ட் வரும் பயணிகள் சிறிது தங்கி இளைப்பாறிச் செல்லவும் பூங்கா இருந்தால் சிறப்பாக இருக்கும்.
கட்டாயம் பூங்காவிற்கு இரவு காவலர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ‛நகராட்சி பூங்காவை புதுப்பித்து, மின்விளக்குகள் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். தவிர பூங்கா பராமரிப்பு பணிகளை தனியாரிடமும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளாம். இதன் மூலம் பூங்காவை எந்த நேரமும் மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு பராமரிக்க முடியும்’ இவ்வாறு கூறினர்.