உலக வங்கி நிதி உதவியுடன் நடந்த வளர்ச்சிப்பணிகள் ஆய்வு..!
உலக வங்கி நிதி உதவியுடன் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனி கலெக்டர் தலைமையில் நடந்தது.
தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டங்களில் உலக வங்கி நிதி உதவியுடன் மேற்கொண்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் உலக வங்கியின் குழு உறுப்பினரும் மூத்த வேளாண் வணிக நிபுணர் பர்போட் யூசேபி மற்றும் உலக வங்கி உறுப்பினரும் வேளாண்மை மதிப்பு சங்கிலிகள் மற்றும் பகுப்பாய்வு ஆலோசகர் ஹம்மத் பட்டேல் முன்னிலை வகித்தனர்.
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் (TNIAMP) 2 உப வடிநில பகுதிகளில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் நவீன முறையில் விற்பனைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக ரூ.120 இலட்சமும், சுருளி ஆறு உபவடிநில பகுதியில் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள 1 அணைக்கட்டு மற்றும் 3 வரத்து கால்வாய்களும், தேனி தாலுகாவில் உள்ள 3 அணைக்கட்டு மற்றும் 4 வரத்து கால்வாய்கள் புனரமைக்கும் பணி என ரூ.630.15 இலட்சம் மதிப்பீட்டிலும், சுருளி ஆறு சத்திரப்பட்டி அணைக்கட்டு பழுதடைந்து நீர் தேக்க முடியாத சூழ்நிலையில் ரூ.24.23 இலட்சம் மதிப்பீட்டில் அணைக்கட்டு புனரமைக்கும் பணிகளும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, நீர்வள ஆதாரத்துறை, வேளாண்மை வணிகத்துறை போன்ற துறைகளில் உலக வங்கி நிதி உதவியுடன் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக வங்கி நிதியுடன் தொடங்கப்பட்ட அனைத்து பணிகளும் முழுவதுமாக நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் அடையும் நன்மைகள் மற்றும் பயன்கள் குறித்தும் மேலும் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நீர் பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் உள்ள முல்லை நதி உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வழங்கப்பட்ட ரூ.60 இலட்சம் நிதியின் மூலம் பொது சேவை மையம், உள்ளீட்டு கடை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், வேளாண் இயந்திரங்கள் மற்றும் இ-நாம் மூலம் விற்பனை மேற்கொள்ளுதல் என விவசாய குழுக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு 68 இலட்சம் வருவாய் ஈட்டி உள்ளனர்.
இக்குழுவின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் உலக வங்கி உறுப்பினர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். சத்திரப்பட்டி அணைக்கட்டு சுருளி ஆற்றின் 48.00 கி.மீ நெடுகையில் அமைந்துள்ளது. சத்திரபட்டி அணைக்கட்டு பழுதடைந்து நீர்தேக்க முடியாத சூழ்நிலையில் அணைக்கட்டு புனரமைக்கும் பணியானது நீர் பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் உப வேலையாக ரூ.24.23 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றது. தற்பொழுது பணிகள் முழுமையாக நிறைவுற்று அதன்மூலம் 133 ஏக்கர் நேரடி பாசனமும் 104 ஏக்கர் மறைமுக பாசனம் நடைபெற்று வருகிறது.
அணைக்கட்டு புனரமைக்கப்பட்ட பின் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் உலக வங்கி உறுப்பினர்கள் விவசாயிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்ட பின்னர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
கூடலூர் பகுதிகளில் விவசாய வயல்வெளி பள்ளி செயல்பாடுகளும் வீரபாண்டி பகுதியில் உள்ள மாதிரி கால்நடை பராமரிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, வேளாண்மை ஆலோசகர் ஷாஜகான், தோட்டக்கலைத்துறை ஆலோசகர் வித்யாசாகர், வேளாண் வணிக ஆலோசகர் ராஜசேகரன், வேளாண்மை இணை இயக்குநர்.சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலெட்சுமி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு – பெரியாறு வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர் அன்புசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.