41 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே நிறைந்த சிகுஓடை கண்மாய்

வற்றாத நீர் வளம் இருந்தும் தேனி அருகே உள்ள அன்னஞ்சி சிகுஓடை கண்மாய் கடந்த 41 ஆண்டுகளில் ஐந்து முறை மட்டுமே நிறைந்துள்ளது

Update: 2023-12-17 10:00 GMT

தேனி வீரப்பஅய்யனார் கோயிலும், வளமான வனப்பகுதிகளை உள்ளடக்கிய ‛தம்பிராங்கானல்’ வனப்பகுதி உள்ள தேனியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்.

தேனி அருகே உள்ள அன்னஞ்சி கிராம பொதுமக்கள் கூறியதாவது: காவிரிக்கு குடகு மலை போல், வைகைக்கு மேகமலை போல், தேனி வீரப்ப அய்யனார் கோயில் மலை மேல் அமைந்துள்ள ‛தம்பிராங்கானல்’ வனப்பகுதி எப்போதும் வற்றாத நீர் வளம் உள்ள அடர்ந்த வனப்பகுதி. பல்வேறு வனவிலங்குகள் வசிக்கும் இங்கு இப்போதும் கூட நீர் ஊற்று கிடைக்கிறது.

அந்தளவிற்கு அடர்த்தியான வனவளம் உள்ளது. இங்கிருந்து தான் வீரப்பஅய்யனார் கோயில் வழியாக செல்லும் நீரோடை வருகிறது. இந்த நீரோடையில் வரும் நீரைக் கொண்டு தேனி மீறுசமுத்திரம் கண்மாய், அல்லிநகரம் பெரிய கண்மாய், அன்னஞ்சி சிகுஓடை கண்மாய்கள் நிறைகின்றன. ஆனால் இந்த நீரோடையில் வரும் நீரில் பெரும் பகுதி வீணாக கொட்டகுடி ஆற்றில் சென்று கலந்து விடுகிறது.

இந்த ஓடை நீரை கொண்டு வந்து சேமிக்க கடந்த 41 ஆண்டுக்கு முன்னர் 110 ஏக்கர் பரப்பில் சிகுஓடை கண்மாயினை பொதுமக்கள் ‛ரத்தினம்’ என்பவர் தலைமையில் இணைந்து உருவாக்கினர். கடந்த நான்கு ஆண்டுக்கு முன்னர் கூட பொதுமக்களிடம் நன்கொடை பெற்று இந்த நீர்வரத்து வாய்க்காலையும், கண்மாயினையும் பொதுமக்கள் சீரமைத்தனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக பராமரிப்பு செய்யவில்லை. இதனால் இக்கண்மாய்க்கு நீர் வருவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

இக்கண்மாய் ஒருமுறை நிறைந்தால் அன்னஞ்சி, டெலிபோன்நகர், சுக்குவாடன்பட்டி, ரத்தினம்நகர், அனுக்கிரகாநகர், கிருஷ்ணாநகர், என்.ஜி.ஓ., காலனி, ஆகிய குடியிருப்புகளில் நிலத்தடி நீர் வளம் உயரும். சுற்றிலும்் உள்ள 2500 ஏக்கர் பரப்பில் உள்ள நிலங்களில் தோண்டப்பட்டுள்ள கிணறுகளிலும் நீர் ஊற்று கிடைக்கும். தற்போது இக்கிராமங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்க கீழே உள்ளது குறிப்பிடத்தக்கது. போதுமான நீர் இருந்தும், தேவைக்கு அதிகமாக நீர்் கிடைப்பதற்கான வாய்ப்புள்ள அடர்ந்த வனப்பகுதிகள் இருந்தும், அதிகாரிகளிடம் முறையான திட்டமிடலும், செயல்பாடும் இல்லாததே, இக்கண்மாய் நிறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு இந்த நீரோடைகளையும், கண்மாய்களையும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


Tags:    

Similar News