தேனியில் நாட்டுக்கோழிக்கு அதிகரிக்கும் கிராக்கி
தேனி மாவட்டத்தில் சீம்பால் விலை லிட்டருக்கு 90 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ நாட்டுக்கோழியின் விலை ஐநுாறு ரூபாய் ஆகவும் உள்ளது.
தேனி மாவட்டத்தில் ஒரு லிட்டர் சீம்பால் 90 ரூபாய்க்கும், ஒரு கிலோ நாட்டுக்கோழி 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. எவ்வளவு விலை கொடுத்தும் சீம்பாலை வாங்கி சாப்பிடவும், நாட்டுக்கோழி சாப்பிடவும் மக்கள் தயாராக இருப்பதால் மாடு, கோழி வளர்க்கும் விவசாயிகள் உற்சாகமாக உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு முக்கியத்தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளில் பெரும்பாலானோர் ஆடு, மாடு, கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். நகர் பகுதியில் வசிக்கும் தொழில் அதிபர்கள், டாக்டர்கள், வர்த்தக பிரமுகர்களும் ஆடு, மாடு, நாட்டுக்கோழி வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர்.
மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் ஆட்டுக்கறி ஒரு கிலோ 1100ம் ரூபாய்க்கு (கிராமங்களில் 700 முதல் 800 ரூபாய்) விற்கப்படுகிறது. ஆனால் நாட்டுக்கோழி நகர்பகுதி, கிராமப்பகுதி என பாகுபாடு இன்றி ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெரும்பாலும் மாடுகள் கன்று போடுவது வழக்கமாக உள்ளதால், கிராமங்களில் எப்போதுமே சீம்பால் கிடைக்கும். (கன்று போட்ட மாடு முதல் நான்கு நாள் முதல் ஐந்து நாள் வரை சீம்பால் தரும்) சாதாரண பால் ஒரு லிட்டர் 40 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், சீம்பால் விலை ஒரு லிட்டர் 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எவ்வளவு விலை கொடுத்தும் சீம்பாலை வாங்கிச் சாப்பிட சீம்பால் பிரியர்கள் தயாராகவே உள்ளனர்.
மாடு வளர்க்கும் விவசாயிகளிடம் முன்கூட்டியே சொல்லி வைத்து சீம்பால் வாங்கிச் சாப்பிடுபவர்கள் நிறைய பேர் உள்ளனர்.அந்த அளவுக்கு சீம்பால் சுவை, சத்து, மருத்துவக் குணங்கள் நிறைந்தது. இதனால் கன்று போட்டது முதல் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பணம் கொட்டத்தொடங்குகிறது.
தவிர பிராய்லர் சாப்பிட்டு சலிப்பேறிய மக்களில் பெரும்பாலானோர் நாட்டுக்கோழிகளை விரும்புகின்றனர். இதனால் நாட்டுக்கோழிகளுக்கு கடும் வரவேற்பும் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு பெரும் அளவில் வருவாய் கிடைப்பதால் அவர்கள் உற்சாகமாக உள்ளனர்.