கிடுகிடுவென சரிகிறது பெரியாறு நீர் மட்டம்..! விவசாயிகள் கவலை..!

முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

Update: 2023-08-10 04:04 GMT

பெரியாறு அணை(கோப்பு படம்)

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கடுமையாக பொய்த்துப்போனது. தென்மாநிலங்கள் முழுக்க மழையில்லை. கேரளாவிலும் மழைப்பொழிவு இல்லாமல் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. இதனால் இந்த ஆண்டு நீர் மட்டம் 122 அடியை தாண்டவில்லை். நீர் திறப்பு மிகவும் கட்டுப்பாடாக இருந்தது. விநாடிக்கு 400 கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்படவில்லை.

இதனால் நீர் மட்டம் சில நாட்கள் 122 என்ற நிலையில் இருந்து வந்தது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் கடுமையாக வாட்டி வருவதால், நீர் வரத்து மிகவும் குறைந்தது.தற்போதைய  நிலையில் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 175 அடியாக உள்ளது. அணையில் இருந்து முதல்போக நெல் பாசனத்திற்கும், குடிநீருக்கும் சேர்த்து விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

இன்று காலை நீர் மட்டம் 120.85 அடியாக குறைந்தது. தற்போதைய நிலையில் முதல் போக நெல் சாகுபடிக்கு இன்னும் 50 நாட்கள் வரை தண்ணீர் தேவைப்படும். இதே சிக்கனத்தை கடைபிடித்தால் முதல்போக சாகுபடியை எடுத்து விடலாம். வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனால், குடிநீருக்கும், இரண்டாம் போக நெல் சாகுபடிக்கும் கடும் பாதிப்பு ஏற்படும்.

பெரியாறு நீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களுக்கு செல்கிறது. தற்போதைய நிலையில் தேனி மாவட்டம் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் முதல்போக நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் பாவும் பணிகள் கூட தொடங்கப்படவில்லை. தேனி மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் நெல் சாகுபடி கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News