வைகை, முல்லை பெரியாற்றில் 50 இடங்கள் அபாயகரமானவை..!
பெரியாறு, வைகை ஆறுகளில் குறிப்பிட்ட 50 இடங்களில் விழுந்தால் உயிர் தப்ப வழியில்லை என்று எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகை, முல்லை பெரியாற்றில் 50 இடங்கள் அபாயகரமானவையாக உள்ளன. இங்கு விழுந்தால் உயிருடன் தப்ப வழியில்லை என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையால் முல்லை பெரியாற்றிலும், வைகை நதியிலும் காட்டாற்று வெள்ளம் வந்து கொண்டுள்ளது. இந்த இரண்டு நதிகளிலும் கடந்த சில மாதங்களில் பலர் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த நதிகளை ஆய்வு செய்து, அதில் 50 இடங்களை அபாயகரமானவை என கண்டறிந்துள்ளோம்.
குறிப்பாக இந்த இடங்களில் விழுந்தால் உயிருடன் தப்ப வழியே இல்லை. இந்த இடங்களில் தடுப்பணைகள், பாதுகாப்பு கம்பி தடுப்புகள் அமைக்க பல கோடி ரூபாய் செலவாகும். இந்த திட்டத்தை உடனே செயல்படுத்துவதும் வாய்ப்பில்லை. எனவே இந்த இடங்களை தவிர்ப்பது மட்டுமே பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஒரே வழி.
இந்த இடங்களில் குளிக்க கூடாது. ஆற்றினை கடக்க முயற்சிக்க கூடாது. வேறு தண்ணீரை தொடும் வகையில் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது. இப்படி பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியும். இந்த இடங்கள் அபாயகரமானவை என எச்சரிக்கை போர்டு வைக்க முடிவு செய்துள்ளோம்.
ஆறுகளை பொறுத்தவரை எல்லா இடங்களும் அபாயகரமானவை தான். ஆனால் சில குறிப்பிட்ட இந்த இடங்களில் விழுந்தால் விழுந்தவர் உடல் ஆழமான பள்ளங்களிலும், பாறை இடுக்குகளிலும் சிக்கிக் கொள்ளும் அவர்களை உயிருடன் மீட்க முடியாது. உடலை மீட்பது கூட பெரும் சவாலான பணியாக மாறி விடும். எனவே ஆறுகளில் குளிப்பது, துணிகளை துவைப்பது, வாகனங்களை கழுவவது போன்ற செயல்களை தவிர்த்து விடுங்கள். மிகவும் பாதுகாப்பான இடங்களில் இந்த செயல்களை செய்வதில் தவறு இல்லை. இவ்வாறு கூறினர்.