கேரளாவில் அணைகள் கட்ட திட்டம்: பெரியாறு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

தமிழக நீர் ஆதாரங்களை வழிமறித்து கேரளா ஒன்பது அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளது என விவசாயிகள் புகார் எழுப்பி உள்ளனர்.

Update: 2024-06-27 03:07 GMT

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: முல்லைப் பெரியாறு உட்பட ஒன்பது புதிய அணைகளை கட்ட கேரளா திட்டமிட்டுள்ளது. இது குறித்து கேரளா நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

சாலியாறு, பம்பை-அச்சன் கோவிலாறு, முல்லைப் பெரியாறு, பட்டிசேரி தடுப்பணை, சட்டமூணாறு தடுப்பணை என தமிழகத்தின் நீராதாரங்களின் மீது கை வைக்க கேரள மாநில அரசு முனைந்திருப்பதை, அமைச்சரினுடைய முழு பேச்சிலிருந்து நான் கவனித்துக் கொண்டேன்.

ஏற்கனவே அச்சன்கோவிலாறு துணைப் படுகைகளிலிருந்து தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவி நயினார் அணைக்கட்டுக்கு வரும் தண்ணீரில் 60 சதமானத்தை ஏற்கனவே திருடிக் கொண்ட கேரளா, மறுபடியும் அச்சன்கோவில் ஆற்றில் தடுப்பணை அமைத்து மொத்த தண்ணீரையும் கேரளாவிற்கு கொண்டு போகப் போகிறது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் கேரள நீர்வளத்துறை அமைச்சர்.

தமிழகத்துக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்ற கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது என்கிற போலியான படிமத்தை தூக்கிப்பிடித்து, நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயல்கிறார் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின்.

முல்லைப் பெரியாறு உட்பட ஒன்பது புதிய அணைகள் கட்டுவதற்கான கேரள அரசின் விருப்பத்தை நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் நேற்று கேரள சட்டசபையில் தெரிவித்தார்.

பெரியாறு, சாலக்குடி, சாலியாறு, பம்பை-அச்சன்கோவில் மற்றும் மீனச்சில் ஆற்றுப்படுகைகளில் வெள்ளத்தடுப்பு அணைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளையும் அரசு தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இவற்றில் மூன்று அணைகளை அமைப்பதற்கான ஆரம்ப ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன என்றதோடு முல்லைப் பெரியாறுக்கு வந்தது தான் பெருஞ்சோகம்.

129 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அரசின் திட்டங்களை ஆராய்ந்த அமைச்சர், அதே நேரத்தில் புதிய அணை கட்டும் பணியைத் தொடரும் அதே வேளையில், அதன் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். ஒரு விரிவான திட்ட அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு மையத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. "தமிழகத்திற்கான தண்ணீர் மற்றும் கேரளாவுக்கான பாதுகாப்பு கொள்கையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது," என்று அவர் வலியுறுத்தினார். மாநிலம் அதன் அண்டை மாநிலங்களுடன் அடைய விரும்பும் நுட்பமான சமநிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்கிற அமைச்சருடைய கருத்து 100% போலியானதாகும்.

புதிய அணைகளின் கட்டுமானமானது முதன்மையாக வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதையும், நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், நீர் மின் உற்பத்தியை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்கிற அமைச்சரின் கூற்றிலிருந்தே கேரள மாநில இடதுசாரி அரசின் உள்நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

பாம்பாறு துணைப் படுகை என்பது தவறான சொல்லாடல். ஏனென்றால் பாம்பாற்றின் துணைப் படுகை என்பது, இந்திரா காந்தி தேசிய பூங்காவில், சின்னாறு வனத்துறை சோதனை சாவடிக்கு கீழே அமைந்திருக்கிறதே தவிர, சட்டமூணாறில் அல்ல) அணைகள் கட்டுவது போன்ற காவிரி நதிநீர்ப் பிரச்னை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி திட்டமிடப்பட்ட குறிப்பிட்ட திட்டங்களையும் அகஸ்டின் தவறாக அவைக்கு எடுத்துரைத்திருக்கிறார்.

அதாவது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத்தால், கேரளாவிற்கு சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 3 டி எம் சி தண்ணீரை திறம்பட பயன்படுத்தி, விவசாயம் மற்றும் வீட்டு உபயோகங்களுக்கு நீர் ஆதாரங்களை பயன்படுத்த பட்டிசேரி, கீழ் சட்ட மூணாறு மற்றும் ஒட்டமரம் அணைகளை கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்கிறார்.

அவருடைய கூற்றுப்படி பட்டிசேரி அருகே கட்டப்படும் தடுப்பணை என்பது, அமராவதி அணைக்கு வந்து சேரும் பாம்பாற்றின் மீது ஏற்கனவே கட்டுவதற்கு முயற்சி எடுக்கப்பட்ட அணையாகும். மறுபடியும் பட்டிசேரியில் ஒன்றரை டி எம் சி கொள்ளளவு கொண்ட தடுப்பணை கட்டப்படுமானால், அமராவதி அணையில் நாம் புழுங்கல் தான் காயப்போட முடியுமே தவிர ஒருபோதும் தண்ணீரைத் தேக்க முடியாது.

அதிலேயே அவர் குறிப்பிடும் கீழ் சட்ட மூணாறு என்கிற பகுதி, உடுமலைப்பேட்டையில் இருந்து அமராவதி அணை வழியாக மூணாறு செல்லும் சாலையில் மறையூறை தாண்டி அமைந்திருக்கும் ஒரு தேயிலை தோட்ட பகுதியாகும். அடிப்படையில் சட்டமூணாறு மேலிருந்து கீழ் சரியும் வகையில் அமைந்திருக்கும் ஒரு மலைத்தொடரின் தொடர்ச்சியாகும்.

டாட்டா பெரு முதலாளியின் கைவசம் இருக்கும் அந்த தேயிலை தோட்டத்தில் தடுப்பணை கட்டி விவசாயத்தை எங்கு போய் செய்வது. மேலாக இந்த சட்ட மூணாறிலும் தடுப்பணைக்காக கேரள மாநில அரசு மறிக்க இருப்பது, அமராவதி அணைக்கு வந்து சேரும் பாம்பாற்றை தான்.

2019 வெள்ளத்தின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட மலப்புரத்தில் உள்ள அம்பித்தான்பொட்டியில் வெள்ளக் கட்டுப்பாட்டு அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கான முன்மொழிவை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மதிப்பீடு செய்து வருவதாக கூறிய அமைச்சர், முக்கியத்துவத்தை முல்லைப் பெரியாரின் மீது வைத்தது தான் நமக்கான எச்சரிக்கை. அமைச்சரின் இந்த கூற்றை முற்றாக நிராகரிக்கிறோம்.

பம்பை அச்சன்கோவில் ஆறு, பட்டிசேரி தடுப்பணை, சட்டமூணாறு தடுப்பணை, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட திட்டங்களை கேரள மாநில அரசு கைவிடாவிட்டால், விரைவில் மாமனிதர் கர்ணன் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்குவேன். கேரள மாநில நீர்வளத் துறை அமைச்சரின் கருத்து முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஐந்து மாவட்டங்களிலும் மக்களை திரட்டும் வேலையை தொடங்குவோம். கேரள மாநில இடதுசாரி அரசு முற்றாக மக்கள் செல்வாக்கை இழந்து விட்ட நிலையில், எப்படியாவது தன்னுடைய இருப்பை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக, மறுபடியும் தமிழகத்திற்கு வந்து சேரும் நான்கு ஆறுகளின் மீது கை வைக்க முனைந்திருப்பது நமக்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். அந்த சவாலை முறியடிக்க கூடிய ஆற்றலும் நெஞ்சுரமும் தைரியமும் இந்த சங்கத்திற்கு உண்டு. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News