அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வீடியோ கால் வருகிறதா ? கவனம் தேவை ! சைபர் கிரைம் போலீஸ்
அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து வீடியோ கால் வந்தால் அதை எடுத்து பேச வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்
உங்கள் மொபைலில் தெரியாத நம்பரில் இருந்து வீடியோ கால் வந்தால் எடுக்க வேண்டாம். அந்த நம்பர் பற்றி தெரிந்து கொண்டு அதன் பின்னர் தொடர்பு கொண்டு பேசலாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் மிகவும் ஹாட் சப்-ஜெக்ட் ஆக உருவாகி உள்ளது வீடியோகால் மோசடி. யாருடைய மொபைல் நம்பருக்காவது வீடியோ கால் வரும், அந்த நம்பரில் பேசுபவர் யார் என நமக்கு தெரியாது. நாம் மொபைல் போனை எடுத்ததும், ஒரு பெண் ஸ்கீரினில் தோன்றுவார்.
நாம் அவர் யார் என கேட்டு தெரிந்து கொள்ளும் முன்னர், மளமளவென உடைகளை கழட்டி விட்டு நிர்வாண போஸ் கொடுப்பார். இதனை நாம் உடனடியாக கட் செய்யும் முன்னர் நமது மொபைலில் உள்ள பிரண்ட் கேமரா மூலமே நமது முகத்தையும் படம் எடுத்து விடுவார்கள். அதாவது நாம் மொபைலில் ஆபாச படம் பார்ப்பது போல், நமது முகத்தையும், மொபைலையும் இணைத்து படம் பிடித்து விடுகின்றனர்.
இவ்வளவு வேலைகளையும் ஓரிரு நொடிகளில் முடித்து விடுகின்றனர். அடுத்து ஒரு நபர் திரையில் தோன்றுவார். உங்களை ஆபாசபடம் பார்ப்பது போல் படம் பிடித்து விட்டோம். உங்கள் முழு தகவல்களையும் சேகரித்து விட்டோம். ஓரிரு நொடிகளில் நீங்கள் ஆபாசபடம் பார்க்கும் வீடியோ உலகம் முழுவதும் பேஸ் புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம்.
இப்படி வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், நாங்கள் தரும் நம்பக்கு இவ்வளவு பணம் அனுப்புங்கள் என மிரட்டுகின்றனர். மானம், மரியாதையை பாதுகாக்க வேறு வழியின்றி நாமும் பணத்தை அவர்கள் கேட்கும் அக்கவுண்ட்டிற்கு அனுப்ப வேண்டி உள்ளது. இப்படி தமிழகத்தில் இந்த நான்கு நாட்களில் மட்டும் நான்கு பேர் ஏமாற்றப்பட்டு பல ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளனர். இது பற்றிய புகார்கள் சைபர் கிரைம் போலீசாருக்கு வந்துள்ளது.
இவர்களது அக்கவுண்ட் நம்பரை வைத்து இவர்களை கைது செய்வதும், சாத்தியமில்லாத வேலை. எனவே தெரியாத நம்பரில் இருந்து வீடியோ கால் வந்தால் பேசாதீர்கள். அப்படி பேச வேண்டுமென்றால் அந்த நம்பரை சாதாரண காலில் அழைத்து முழு விவரம் தெரிந்து கொண்டு பேசுங்கள். அப்படியே வீடியோ கால் எடுத்து அவர்கள் மிரட்டினாலும் பணம் அனுப்பாதீர்கள். அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டாலும் பரவாயில்லை. அது ஜோடிக்கப்பட்ட வீடியோ என்பது விவரம் அறிந்த அனைவருக்கும் தெரியும். குறிப்பாக கல்லுாரி மாணவ, மாணவிகள் இந்த விஷயத்தில் சிக்கி மானம், மரியாதைக்கு பயந்து பணத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே யாரும் இந்த புதிய மோசடியில் யாரும் சிக்க வேண்டாம். அப்படி மிரட்டுபவர்கள் குறித்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள சைபர் கிரைம் போலீசாக்கு தகவல் தாருங்கள் என தெரிவித்துள்ளனர்.